
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ஆட்டம் காட்டிக்கொண்டிருந்த 'ஃபெங்கல் புயல் மிக மெதுவாகவே கரை கடந்த நிலையில் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் என பல மாவட்டங்களிலும் அதி கனமழையை கொடுத்து வெள்ளக்காடாக்கியது. இதனால் பெரும் சேதங்களும் ஏற்பட்டுள்ளது. மேலும் பல பகுதிகளில் மின் விநியோகம் தடைப்பட்டுப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மின்சாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு விரைவாக மின்சாரம் வழங்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு மீட்புப் பணிகளில் இறங்கியுள்ளது. மேலும் மின்பாதைகள் சேதமடைந்துள்ளதை போர்க்கால அடிப்படையில் சரி செய்து மின்சாரம் வழங்க வேண்டும் என்பதால் தமிழ்நாட்டில் புயல், வெள்ளப் பாதிப்பு இல்லாத மாவட்டங்களில் இருந்து பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மின் பணியாளர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

அதேபோல, புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி மின்வாரிய அலுவலக உதவி செயற்பொறியாளர் ஞானசேகரன் தலைமையில் 17 மின் பணியாளர்களும், மாத்தூர் உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் தலைமையில் 17 மின் பணியாளர்கள் என 34 மின் பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதேபோல் மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமான மின் பணியாளர்கள் சென்றுள்ளனர். புயலால் மின்சாரம் தடைப்பட்டுள்ள பகுதிகளில் விரைவில் மின்சாரம் வழங்க துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.