Skip to main content

“தமிழ்நாட்டில் பெண்களை இழிவாக நடத்த காவல்துறைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளாரா?” - விஜய் காட்டம்

Published on 27/05/2025 | Edited on 27/05/2025

 

vijay condemns for police hit Tvk female executives

சென்னை வியாசர்பாடி முல்லை நகர்ப் பகுதியில் நேற்று (26-05-25) இரவு தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சியைச் சேர்ந்த பெண் நிர்வாகிகள் நிவாரணப் பொருட்கள் வழங்கச் சென்றனர். அப்போது த.வெ.க பெண் நிர்வாகிகளை, காவல்துறையினர் தடுத்து நிறுத்தி தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இந்த சம்பவம் குறித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சென்னை, வியாசர்பாடி, முல்லை நகர்ப் பகுதியில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் பல குடிசைகள் தீக்கிரையாகியுள்ளன. தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று செயல்பட்டதால், உயிரிழப்புகள் தடுக்கப்பட்டு, பல குடிசைகள் தப்பியுள்ளன. தீவிபத்தில் குடிசைகளை இழந்த மற்றும் முன்னெச்சரிக்கையாக அப்புறப்படுத்தப்பட்ட மக்கள், தற்காலிகமாக அருகில் உள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். இந்தத் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடத்திற்குத் தமிழக வெற்றிக் கழகத் தோழர்கள் சென்று அங்கிருந்தவர்களுக்கு மனிதநேய அடிப்படையில் உடை, போர்வை, பாய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களும் உணவும் வழங்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களும் தாமாக முன்வந்து பெற்றுக்கொண்டனர்.

இதனைப் பார்த்த காவல் துறையினர், த.வெ.க. நிர்வாகிகளைத் தடுத்து நிறுத்தியதுடன், அவர்களை அங்கிருந்து செல்லுமாறு மிரட்டியுள்ளனர். காவல் துறையினர் வரம்பு மீறிப் பேசி, அத்துமீறிச் செயல்படுவதைப் பார்த்த கழகத்தின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கங்காவதி(45), மக்களுக்கு உதவி செய்வதைத் தடுப்பது ஏன் என்று காவல் துறையினரை நோக்கிக் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது காவல் துறையினர் கொஞ்சமும் ஈவு இரக்கமின்றி, கழக மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கங்காவதியின் வயிற்றில் எட்டி உதைத்து, கீழே தள்ளியுள்ளனர். மேலும், இதைத் தடுக்கச் சென்ற கழக மகளிரணியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வியின் ஆடையைக் காவல் துறையினர் பிடித்து இழுத்துத் தள்ளி விட்டுள்ளனர். காயமடைந்த கழக உறுப்பினர்கள், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

vijay condemns for police hit Tvk female executives

தீவிபத்தில் பாதிக்கப்பட்டு, குடிசைகளை இழந்து, தங்களின் அத்தியாவசிய உடைமைகளை இழந்து, நிர்க்கதியாய் நிற்கும் மக்களுக்கு உதவுவது என்பது காவல் துறையால் தடுத்து நிறுத்தப்பட வேண்டிய மாபெரும் குற்றச் செயலா? பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்வதோ, அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களைக் கொடுத்து உதவுவதோ கூடாது என்று காவல் துறை சொல்கிறது என்றால், அவர்களின் உண்மையான நோக்கம் என்ன? பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியதைத் தடுத்து நிறுத்தியதற்காக, காவல் துறையினரைப் பார்த்து நியாயமான முறையில் கேள்வி கேட்ட த.வெ.க. பெண் நிர்வாகிகளை பூட்ஸ் காலால் வயிற்றில் எட்டி உதைப்பதையும், ஆடையைப் பிடித்து அந்த ஆடை கிழியும் அளவிற்கு அவர்களை இழுத்துத் தள்ளி விடும் காவல் துறையின் செயலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொள்கிறாரா?

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பெண்களை பூட்ஸ் காலால் எட்டி உதைத்தும், அவர்களின் ஆடையைக் கிழித்தும் அராஜகமாக இழிவாகத்தான் நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளாரா? தற்போது தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சி அல்ல, அதிகாரத் திமிர் பிடித்த உண்மையான பாசிச ஆட்சியே என்பதற்கு இதைவிட சாட்சி தேவையா என்ன? மக்களுக்கான ஆட்சி நடத்துகிறோம் என்று வெற்று விளம்பரம் செய்யும் மு.க.ஸ்டாலினின் அரசின் இந்தக் காட்டுமிராண்டித்தனமான அராஜகப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த அராஜகச் செயலில் ஈடுபட்டு தவறிழைத்த காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மகளிருக்கு நாங்கள் தான் பாதுகாப்பு என்று சொல்லி, அவர்களை ஏமாற்றி அவர்களின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த பின், அவர்களுக்கு உங்கள் கட்சிக்காரர்களிடமிருந்தே பாதுகாப்பில்லாத சூழல் இருப்பதைப் பல முறைகள் சுட்டிக் காட்டியுள்ளேன். ஆனாலும் காவல் துறை வாயிலாகவும் அராஜகத்தைக் கட்டவிழ்த்துவிடும் இந்தப் போக்கை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

காவல் துறை, ஆளுங்கட்சியின் ஏவல் துறையாக மாறி, அப்பாவிகள் மீது மிருகப் பலத்தைக் காட்டி, மக்களிடம் வெறுப்புகளைக் குவித்து வருகிறது. பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றி வரும்  மு.க.ஸ்டாலின் தலைமையிலான விளம்பர மாடல் அரசு, பெண்களின் உரிமைகளைப் பறித்து, அவர்களை வீதியில் போராட வைத்திருக்கிறது. இதே போன்று மகளிருக்கு எதிரான அராஜக நிலை தொடர்ந்தால், தமிழக வெற்றிக் கழகம் சார்பாக மிகப் பெரிய மக்கள் போராட்டத்தையும் சட்டப்போராட்டத்தையும் முன்னெடுக்கத் தயங்க மாட்டோம் என்பதைத் தெரிவித்துகொள்கிறேன்’ என காட்டமாகத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்