
தமிழ்நாட்டில் 6 நாடாளுமன்ற மாநிலங்களை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் 24ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. அதன்படி, அன்புமணி ராமதாஸ், மு. சண்முகம், என். சந்திரசேகரன், எம். முகமது அப்துல்லா, பி. வில்சன் மற்றும் வைகோ ஆகிய 6 பேரின் பதவிக் காலங்கள் முடிவடைய உள்ளன.
இந்த சூழ்நிலையில் இந்த காலி பதவியிடங்களுக்கான தேர்தல் ஜூன் 19ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் அறிவித்துள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஜூன் 2ஆம் தேதி தொடங்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளது. இதனால், கூட்டணி கட்சிகளுக்கு மாநிலங்களவை சீட் கொடுக்கலாமா? அல்லது தங்களது கட்சிக்கே சீட்டை ஒதுக்கி கொள்ளலாமா? என திமுக மற்றும் அதிமுக கட்சிகளுக்குள் குழப்பம் நீடித்து வருகிறது. எம்.எல்.ஏக்களின் அடிப்படையில் திமுகவை பொறுத்தவரை 4 மாநிலங்களவை உறுப்பினர்களும், அதிமுகவை பொறுத்தவரை 2 மாநிலங்களவை உறுப்பினர்களும் மாநிலங்களவைக்கு செல்வார்கள் என்று கூறப்படுகிறது.
கடந்தாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து தேமுதிக போட்டியிட்ட போது தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படும் ஒப்பந்தம் கையெழுத்தானதாகக் கூறப்பட்டது . இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் தேதி அக்கட்சியின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில், தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முன்னிலையில் அதிமுக - தேமுதிக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில், தேமுதிகவுக்கு 5 மக்களவைத் தொகுதிகள் வழங்கப்பட்டதோடு 1 மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் வழங்கப்படும் என்று கூட்டணி ஒப்பந்ததத்தில் பேசப்பட்டதாகக் கூறப்பட்டது.

இதனையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் ராஜ்சபா சீட் தொடர்பாக பேசுகையில், “இது பேச்சுவார்த்தை இல்லை. கூட்டணி அமைந்தபோதே கையெழுத்து இடப்பட்டு உறுதி செய்யப்பட்டது தான் ராஜ்யசபா சீட். ராஜ்யசபா தேர்தலுக்கான நாள் வரும் பொழுது தேமுதிக சார்பில் யார் ராஜ்யசபா உறுப்பினராக டெல்லிக்குச் செல்வார் என்பதை அந்த நேரத்தில் தேமுதிகவின் தலைமை கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்” எனத் தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமியிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்கையில், “அதாவது கூட்டணி கிட்டணி எல்லாம் விட்டு விடுங்கள். தேவை இல்லாத கேள்விகள் எல்லாம் கேட்க வேண்டாம். நாங்கள் ஏதாவது சொன்னோமா?. யார் யாரோ சொல்கிற கேள்விகள் எல்லாம் கேட்க வேண்டாம். நாங்கள் ஏதாவது வெளிப்படுத்தினோமா?. தேர்தல் அறிக்கையில் என்ன வெளியிட்டோம் எனப் படித்துப் பாருங்கள். அதன்படி நடந்து கொள்வோம்” எனத் தெரிவித்தார். இதனால், அதிமுக - தேமுதிக இடையே மறைமுக சலசலப்பு இருந்து வருகிறது.

இந்த நிலையில், மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவியிடங்களுக்கான தேர்தல் வரும் ஜூலை 19ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதில் அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் தேமுதிகவுக்கு, இந்த முறை மாநிலங்களவை சீட் கிடைக்குமா? என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. இந்நிலையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (27-05-25) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம், மாநிலங்களவை சீட் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பிரேமலதா விஜயகாந்த், “நாங்கள் ஏற்கெனவே உங்களுக்கு சொன்னது தான். பொறுத்திருங்கள், பொறுமை கடலினும் பெரிது. தேமுதிக மாநாடு ஜனவரி 9ஆம் தேதி கடலூரில் நடக்க இருக்கிறது. அன்றைக்கு எல்லாமே தெளிவுப்படுத்தப்படும். தற்போது தான் தேர்தல் தேதி அறிவித்திருக்கிறார்கள். இன்னும் நேரம் இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்” என்று தெரிவித்தார்.