Skip to main content

“தெய்வச்செயலை ஏன் இப்படி காத்து நிற்கிறது திமுக?” - இபிஎஸ் சரமாரி கேள்வி

Published on 27/05/2025 | Edited on 27/05/2025

 

edappadi palaniswamy question raise to Cm mk stalin for arakkonam case

அரக்கோணத்தில் தி.மு.க இளைஞரணி துணை அமைப்பாளராக பொறுப்பு வகித்து வந்த தெய்வச்செயல் மீது பெண் ஒருவர் சில தினங்களுக்கு முன்பு பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். அதுமட்டுமல்லாமல் தெய்வச்செயல், பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டி வருவதாக அப்பெண் குற்றச்சாட்டை வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார். இது தொடர்பாக அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 10ஆம் தேதி 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

அதோடு தெய்வச்செயல் சுமார் 20 பெண்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் செய்துள்ளார் என்ற மற்றொரு புகாரையும் பாதிக்கப்பட்ட இளம்பெண் தெரிவித்திருந்தார். இந்த புகார் மீதும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இச்சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்வலையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. அதே சமயம் திமுகவின் அரக்கோணம் மத்திய ஒன்றிய இளைஞர் அணித் துணை அமைப்பாளராகப் பொறுப்பு வகித்து வந்த தெய்வச்செயலை அப்பொறுப்பில் திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி நீக்கியிருந்தார். இதற்கிடையில், இந்த விவகாரத்தில் காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், காவல்துறையினர் தன்னை மிரட்டுவதாகவும், கண்ணிய குறைவாக நடத்துவதாகவும், தன்னுடைய சுயவிவரத்தை வெளியிடுவதாகவும் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதனிடையே, இரண்டு நாட்களுக்கு முன்பு அரக்கோணத்தில் அனுமதியின்று துப்பாக்கி வைத்திருந்த திமுக கவுன்சிலர் பாபுவை (37) போலீசார் கைது செய்தனர். ராஜஸ்தானைச் சேர்ந்த தினேஷ் குமார் என்பவர் கைத்துப்பாக்கியை வடமாநிலத்தில் இருந்து வாங்கி தந்ததாக பாபு அளித்த வாக்குமூலத்தின் படி, அவர் வைத்திருந்த துப்பாக்கி, ஏர்கன், தோட்டாக்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து அவரை போலீசார் கைது செய்தனர். அரக்கோணத்தில் நடந்த இந்த இரண்டு சம்பவங்களுக்கு அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

edappadi palaniswamy question raise to Cm mk stalin for arakkonam case

இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘அலங்கோல ஆட்சிக்கு, அரக்கோணமே சாட்சி. அனுமதியின்றி 2 துப்பாக்கிகள் வைத்திருந்ததாக அரக்கோணம் திமுக கவுன்சிலர் பாபு உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. இந்நிலையில், அரக்கோணம் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண், தான் திமுக அரசின் காவல்துறையால் மிரட்டப்படுவதாக நேற்றும் கண்ணீருடன் ஒரு காணொளி வெளியிட்டுள்ளார். திமுக இளைஞரணி நிர்வாகி தெய்வச்செயல் மாணவியை ஏமாற்றுகிறான், பல திமுகவினரின் பாலியல் இச்சைக்கு அந்த மாணவியை இணங்குமாறு துன்புறுத்துகிறான், இதனை தைரியமாக வந்து புகார் அளித்த மாணவியை காவல்துறை மிரட்டுகிறது, திமுக இளைஞரணியின் ஏவல்துறையாக காவல்துறை இருப்பதால் நடவடிக்கை எடுக்க மறுக்கிறது. 

திமுக நகராட்சி கவுன்சிலரிடம் முறையான அனுமதி பெறாத  துப்பாக்கி இருக்கிறது. போதை இளைஞரிடம் கத்தி, பள்ளி மாணவர்களின் புத்தகப் பையில் அரிவாளைத் தாண்டி, சர்வ சாதரணமாக ஆட்டோமேட்டிக் துப்பாக்கிகள் தமிழகத்தில் புழக்கத்திற்கு வந்துவிட்டது. இதைத் தானே, இந்த ஸ்டாலின் மாடலைத் தானே அலங்கோல ஆட்சி என்கிறேன்? இந்த உண்மையைச் சொன்னால் எதற்கு மு.க.ஸ்டாலினுக்கு கோபம் வருகிறது? இந்த அவலத்தைக் கண்டித்து போராட்டம் நடத்தினால் எங்களுக்கு தடை. ஆனால், குற்றவாளிக்கு ஆதரவாக திமுக பொதுக்கூட்டம் நடத்துகின்றது. நான் கேட்கிறேன், உங்களுக்கு வெட்கமாகவே இல்லையா மு.க.ஸ்டாலின்? ஏன் தெய்வச்செயலை இப்படி காத்து நிற்கிறது திமுக? தெய்வச்செயலைக் காப்பாற்றுவதன் மூலம், பின்னால் பெரும் அரசியல் முதலை ஏதேனும் மறைக்கப்பட்டு காக்கப்படுகிறதா? அப்படியெனில், யார் அந்த சார்? பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை, எங்கள் கேள்விகள் ஓயாது. திமுக கவுன்சிலர் கையில் நவீன துப்பாக்கி எப்படி வந்தது என்ற கேள்விக்கு என்ன பதில் வைத்திருக்கிறார் மு.க.ஸ்டாலின்? சட்டம் ஒழுங்கு இந்த லட்சணத்தில் நாறிக் கொண்டிருப்பதற்கு, ஒரு நல்ல முதல்வராக இருந்தால் வெட்கித் தலைகுனிய வேண்டும். ஆனால், இவர் அதெல்லாம் செய்யப்போவது இல்லை. நான் எப்போதும் சொல்வது போல, இந்த ஆட்சி முடியும் வரை, மக்களே தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும், குறிப்பாக திமுக வினரிடம் இருந்து’ எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்