
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் சான்றோர்குப்பம் பகுதியில் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து வாணியம்பாடி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகக் கிடங்கிற்கு 30 டன் ரேசன் அரிசியுடன் சென்ற லாரியை தட்சிணாமூர்த்தி என்பவர் ஓட்டி சென்று கொண்டிருந்தார். அப்போது, சான்றோர்குப்பம் பகுதியில் சாலையின் நடுவே இருசக்கர வாகனத்தில் கடக்க முயன்றுள்ளார். அப்போது அவர் மீது மோதாமல் இருக்க தட்சிணாமூர்த்தி லாரியை இடது புறமாக திருப்பிய போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் லாரி கவிழ்ந்தது. அப்போது அருகே இருந்த பானி பூரி கடை மற்றும் போண்டா கடையை நடத்தி வந்த ஜமீல்பாஷா என்பவர் மீது ரேசன் அரிசி மூட்டைகள் சரிந்து விழுந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த நகர காவல் துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அரிசி மூட்டைகளுக்கு அடியில் சிக்கிப் படுகாயமடைந்த ஜமீல் பாஷாவை ஆம்புலன்ஸ் உதவியுடன் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஜமீல் பாஷாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதையடுத்து நகர காவல் துறை போலீசார் கிரேன் மூலம் ரேசன் அரிசி லாரியை மீட்டனர். மாற்று லாரி வரவழைக்கப்பட்டு அங்கிருந்து ரேசன் அரிசி மூட்டைகள் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அதேபோல், வேலூர் மாவட்டம் கருகம்புதூர் அருகே மாங்காய் ஏற்றி வந்த மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. திருவள்ளுவர் மாவட்டத்திலிருந்து கிருஷ்ணகிரிக்கு ஆந்திராவை சேர்ந்த மோகன் என்பவருக்கு சொந்தமான மினிலாரியில் ஓட்டுநர் ஆந்திராவை சேர்ந்த சதீஷ் மூன்றுடன் மாம்பழங்களை ஏற்றிக்கொண்டு விற்பனைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு மாம்பழத்தின் தரம் சரியில்லை என திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் மாம்பழ லாரி மீண்டும் கிருஷ்ணகிரியிலிருந்து திருவள்ளூர் மாவட்டத்திற்கு சென்று கொண்டிருந்தபோது சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கருகம்புதூர் அருகே நிலை தடுமாறி சாலையின் இரும்பு தடுப்புகளில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதனால் லாரியில் இருந்த மாம்பழங்கள் முழுவதும் சாலைகளில் கொட்டி உருண்டு ஓடியது. இதனைக் கண்ட அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வேகவேகமாக மாம்பழங்களை பொறுக்கிச் சென்றனர். விபத்து குறித்து வடக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் ஓட்டுநர் சதிஷ் நல்வாய்ப்பாக காயமின்றி உயிர் தப்பினார்.
மிக முக்கியமான இந்த சாலையின் பல இடங்களில் சாலைகள் சரியில்லாமல் உள்ளது. சென்னை டூ பெங்களூரு இடையே 6 இடங்களில் சாலை சுங்க வரி டோல்கேட்கள் அமைக்கப்பட்டுள்ளது. சுங்க கட்டணம் வசூலிக்கும் தனியார் நிறுவனங்கள் சாலையை பராமரிப்பதில் கோட்டை விடுகின்றனர். இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. இதனால் இச்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடந்து கொண்டே உள்ளன. கடந்த மூன்று தினங்களில் மட்டும் சரக்கு லாரிகள் இரண்டு மூன்று கவிழ்ந்து பெரும் நட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.