
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கிளை நூலகத்திற்குள் புகுந்த மர்ம கும்பல் ஒன்று இளைஞர் ஒருவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சாத்தான்குளம் காமராஜர் சிலை அருகே கிளை நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. சாத்தான்குளம் ஆர்சி வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்த அன்னராஜன் (30) என்பவர் சாத்தான்குளம் கிளை நூலகம் உள்ள பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் அவரை தாக்க முயன்றுள்ளனர். இதனால் பதறியடித்துக் கொண்டு அன்னராஜ் நூலகத்திற்கு உள்ளே ஓடி உள்ளார். இருப்பினும் அவரை விடாத அந்த கும்பல் நூலகத்திற்குள் புகுந்து சரமாரியாக வெட்டினர்.
நூலகத்தில் இருந்த வாசகர்கள் இதனால் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர். இதில் பயங்கர வெட்டுக் காயங்களுடன் அன்னராஜ் மீட்கப்பட்டார். தகவலறிந்து அங்கு வந்த சாத்தான்குளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாத்தான்குளத்தில் நூலகத்திற்குள் நிகழ்ந்த இந்த அரிவாள் வெட்டு சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.