
டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நிதி ஆயோக் அமைப்பின் ஆட்சி மன்ற குழுவின் கூட்டம் நேற்று (24.05.2025) நடைபெற்றது. அதில் ‘2047இல் வளர்ச்சியடைந்த பாரதம்’ என்ற தலைப்பில், தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம், மரபுசாரா எரிசக்தி உருவாக்கம் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி குறித்து அவர் வலியுறுத்திப் பேசியிருந்தார். இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று (25.05.2025) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “மக்களுடைய பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என்று முதலமைச்சர் கருதி இருந்தால் கடந்த 3 ஆண்டு காலமாக எதற்கு நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணித்தார். இதுதான் மக்களுக்கு ஏற்படுகின்ற மிகப்பெரிய சந்தேகங்கள். அதோடு முதல்வர் மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்கு வருகை தந்த போது கருப்பு பலூன் பறக்க விட்டு எதிர்ப்பை தெரிவித்தார். ஆனால் தி.மு.க. ஆளுங்கட்சியாக வந்த பிறகு முதல்வர் மு.க. ஸ்டாலின் அதே பிரதமருக்கு வெள்ளைக்குடை பிடித்தார். இந்த வெள்ளைக்குடை பிடித்த இன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருக்கின்ற போது ஒரு நிலைப்பாடு, ஆளுங்கட்சியாக வந்த பிறகு ஒரு நிலைப்பாடு என இரட்டை வேடம் போடுகின்ற கட்சி தி.மு.க. என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது.
நாங்கள் (அதிமுக) கேட்கின்ற கேள்வி, எதிர்க்கட்சி கேட்கின்ற கேள்வி, மக்கள் கேட்கின்ற கேள்வி ஒரு முதலமைச்சர் தன்னுடைய கடமையைச் செய்யத் தவறிவிட்டார். கடந்த 3 ஆண்டு காலமாக நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்திலே கலந்துகொண்டு மக்களுடைய பிரச்சனையை அந்த கூட்டத்திலே தெரிவித்திருந்தால் மக்களுக்கு நன்மை கிடைத்திருக்கும். திட்டங்களுக்கு அனுமதி கிடைத்திருக்கும். நிலுவைத் தொகை கிடைத்திருக்கும் என்று மக்கள் கருதுகின்றார்கள். அதைச் செய்யத் தவறிய இன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். அதோடு தமிழகத்திலே சட்ட ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கின்றன. நான் ஒவ்வொரு முறையும் ஊடகத்தினரைச் சந்திக்கின்ற போது தமிழகத்தில் நடைபெற்ற சில சம்பவங்களைக் கோடிட்டுக் காட்டி இந்த அரசு வந்த பிறகு நாட்டு மக்களுக்குப் பாதுகாப்பில்லை, பெண்களுக்குப் பாதுகாப்பில்லை.
சிறுமிகளுக்குப் பாதுகாப்பு இல்லை, அப்படிப்பட்ட அவல் ஆட்சி தமிழகத்திலே தொடர்கிறது என்று நான் ஊடகத்தின் வாயிலாகப் பத்திரிக்கையின் வாயிலாகச் சட்டமன்றத்திலும் நான் பேசியிருக்கின்றேன். அறிக்கையின் வாயிலாக வெளியிட்டிருக்கின்றேன். ஆனால் இந்த அரசு உரிய முறையிலே மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கத் தவறிவிட்டது. சட்ட ஒழுங்கு மிக மிக மோசமான நிலையிலே இருந்து கொண்டிருக்கின்றது. இது தான் நாடறிந்த உண்மை” எனத் தெரிவித்தார்.