
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., போன்ற 24 வகையான குடிமைப் பணிகளுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) சார்பில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தேர்வானது, முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என 3 படிநிலைகளைக் கொண்டது. அந்த வகையில் முதல் நிலைத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான 979 பணியிடங்களுக்கு நாடு முழுவதும் சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வின் பொது அறிவுத் தேர்வு இன்று (25.05.2025) காலை 09:30 மணிக்குத் தொடங்கி 11:30 மணி வரை நடைபெற்றது.
இந்நிலையில் பொது அறிவு தேர்வில் டி (D) வரிசை தொகுப்பு வினாத்தாளின் 8வது கேள்வியில் ‘பின்வருவனவற்றில் 'சுயமரியாதை இயக்கத்தின்' நிறுவனர் யார்?’ (Who among the following was the founder of the 'Self-Respect Movement?) என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதற்கு விடையளிக்கும் வகையில் அ.) பெரியார் ஈ.வி. ராமசுவாமி நாயக்கர், ஆ) டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், இ) பாஸ்கர்ராவ் ஜாதவ், ஈ) தினகர்ராவ் ஜவல்கர் என 4 பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பெரியாரின் சாதிப் பெயரைக் குறிப்பிட்டு கேள்வி கேட்கப்பட்டிருப்பது தேர்வர்கள் மத்தியில் சலசலப்பையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் பெயருக்குப் பின்னால் சாதியைக் குறிப்பிடக்கூடிய பழக்கத்தை முழுமையாக நடைமுறையில் இருந்தும் மக்கள் மனதிலிருந்து மாற்றியவர் பெரியார் ஆவார். ஆனால் அவருடைய பெயருக்குப் பின்னாலே சாதிப் பெயரைக் குறிப்பிட்டு கேள்வி கேட்டிருப்பது மக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுயமரியாதை இயக்கம் பெரியாரால் கடந்த 1925அம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 1929ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் தனது பெயருக்குப் பின்னால் உள்ள சாதிப் பெயரை நீக்கிவிட்டதாகப் பெரியார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.