
டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு கடந்த 21 ஆம் தேதி 200க்கும் மேற்பட்ட பயணிகளுடன் இண்டிகோ விமானம் ஒன்று சென்றது. இந்த விமானம் பதான்கோட் அருகே பறந்து கொண்டிருந்த போது ஆலங்கட்டி மழை பெய்ததன் காரணமாக மோசமான வானிலை நிலவியுள்ளது. இதனால் விமானம் வானில் பறக்கமுடியாமல் தள்ளாடியுள்ளது. பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்த விமானி பாதுகாப்பிற்காக விமானத்தை பாகிஸ்தான் வான் பரப்பிற்குள் செலுத்துவதற்காக லாகூர் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையிடம் அனுமதி கேட்டுள்ளார். ஆனால், இந்திய விமானம் பாகிஸ்தான் வான் பரப்பிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி பத்திரமாக விமானத்தை ஸ்ரீ நகர் விமான நிலையத்தில் தரையிறக்கியுள்ளார். நல்வாய்ப்பாக விமானத்தில் பயணித்த பயணிகள் யாருக்கும் எந்த விதமான காயமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் விமானத்தின் மூக்கு பகுதி ஆலங்கட்டி மழையால் தேசமடைந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் விசாரணை நடத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அண்மையில் பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா பாகிஸ்தானில் ஆபரேஷன் சிந்தூர் என்று பெயரில் பதிலடி தாக்குதல் நடத்தியது. மேலும், பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஆதரிப்பதாக கூறி இந்தியா சிந்து நதி நீர் நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் காரணமாக இந்திய விமானங்கள் தங்களது வான் பரப்பில் பறக்க பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.