
கேரள மாநிலம் கண்ணூரில் எட்டு வயது சிறுமியை தந்தையே கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் சிறுபுழா பகுதியைச் சேர்ந்தவர் மாமச்சான். இவருடைய மனைவி அனிதா. இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு மனக்கசப்பு காரணமாக மனைவி அனிதா தாயார் வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். இந்நிலையில் தாயை பிரிந்து அப்பாவுடன் வாழ்ந்து வந்த எட்டு வயது சிறுமி தாய் அனிதாவை வீட்டுக்கு வர வைப்பதற்காக பிராங்க் வீடியோ ஒன்றை தயாரித்துள்ளார்.
சிறுமியின் பிராங் வீடியோவை பார்த்த தந்தை மாமச்சன் சிறுமியை கொடூரமாக தாக்கியுள்ளார். அரிவாளை வைத்து மிரட்டியதோடு காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட சிறுமியை போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மாமச்சான் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் மாநில குழந்தைகள் உரிமை ஆணையமும் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.