
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும், பாமகவின் தலைவருமான அன்புமணிக்கும் கடந்த சில காலமாகவே மோதல் போக்கு நிலவி வருவதாக கூறப்பட்டு வந்தது. அதனை உறுதி செய்யும் விதமாக கடந்த மாதம் திடீரென செய்யார்களைச் சந்தித்த ராமதாஸ், பா.ம.க. தலைவர் பொறுப்பை நானே எடுத்துக் கொள்கிறேன் என்று அறிவித்ததோடு, அன்புமணி இனி பாமகவின் செயல் தலைவராக செயல்படுவார் என்று தெரிவித்தார். இது பாமக தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சித்திரை முழு நிலவு மாநாட்டில் இருவரும் அருகருகே அமர்ந்திருந்த போதிலும் ராமதாஸும், அன்புமணியும் பேசிக்கொள்ளவில்லை. மேலும் அந்த மாநாட்டில் பேசிய ராமதாஸ் நிர்வாகிகளை கடுமையாக சாடியிருந்தார். ஆனால் அது மறைமுகமாக அன்புமணிக்கு ராமதாஸ் விடுத்த எச்சரிக்கையாகவே அரசியல் களத்தில் பார்க்கப்பட்டது. அதே சமயம் கட்சிக்குள் அன்புமணிக்கு ஆதரவாக பல குரல்கள் எழுந்தன.
இத்தகைய பரபரப்பான சூழலில் ராமதாஸ் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டினார். ஆனால், அந்த கூட்டத்தில் 8 மாவட்டச் செயலாளர்களும், 7 மாவட்ட தலைவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இது கட்சிக்குள் ராமதாஸை விட அன்புமணியின் கை ஓங்கியதாகவே அரசியல் வல்லுநர்கள் கருதினர்.
இந்த நிலையில் தர்மபுரியில் நடைபெற்ற பாமக கூட்டத்தில் பேசிய அன்புமணி, “தொண்டர்கள் சொல்வதை வைத்து 2026 தேர்தலில் யாருடன் கூட்டணி என முடிவு செய்வோம். ராமதாஸ் வழியில், அவர் இலட்சியங்களை நிறைவேற்றுவோம். கடந்த ஒரு மாதமாக இரவில் தூக்கம் வரவில்லை. என் மனதிற்குள் பல கேள்வி. நான் என்ன தப்பு செய்தேன்? ஏன் நான் மாற்றப்பட்டேன்? என் கனவு, என் இலட்சியம் எல்லாமே, அவர் என்ன நினைத்தாரோ அதைத்தான் நிறைவேற்றினேன். இனியும் ஒரு மகனாக என்ன நினைக்கிறாரோ அதைத்தான் நிறைவேற்றுவேன். இனிவரும் காலம் நம் காலம். நாம் அனைவரும் ஒற்றுமையாக அணுகுவோம். வெற்றி பெறுவோம்” என்றார்.