
ஜம்மு - காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி (22.04.2025) பயங்கரவாதக் கும்பல் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியது. இதில் 26 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இத்தகைய சூழலில் தான் பகல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் சார்பில் தாக்குதல் நடத்தப்பட்டது. இன்று (07.05.2025) நள்ளிரவு 01.44 மணி அளவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் நள்ளிரவில் முப்படைகள் கூட்டாக இணைந்து அதிரடி தாக்குதல் நடத்தினர்.
அதே சமயம் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்தது. இதனையடுத்து இந்த தாக்குதல்களை நிறுத்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த 10ஆம் தேதி (10.05.2025) மாலை 05.00 மணியளவில் இருநாட்டு ராணுவ தளபதி இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தாக்குதல் நிறுத்தத்தை ஒப்புக்கொண்டதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதே போல், பாகிஸ்தானும் தாக்குதலை நிறுத்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி எம்.பி. இன்று (24.05.2025) ஜம்மு - காஷ்மீருக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் படி பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தானின் எல்லை தாண்டிய தாக்குதலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை ராகுல் காந்தி சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் அப்பகுதியில் உள்ள பள்ளிக்குச் சென்ற ராகுல் காந்தி, பாகிஸ்தானின் எல்லை தாண்டிய தாக்குதலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் மாணவர்களிடம் பேசுகையில், “இப்போது, நீங்கள் ஆபத்தையும் கொஞ்சம் பயமுறுத்தும் சூழ்நிலையையும் பார்த்திருக்கிறீர்கள். ஆனால் அதைப்பற்றிக் கவலைப்படாதீர்கள்.
எல்லாம் இயல்பு நிலைக்குத் திரும்பும். இந்தப் பிரச்சினைக்கு நீங்கள் பதிலளிக்கும் விதம் நீங்கள் மிகவும் கடினமாகப் படிப்பதும் விளையாடுவதும் ஆகும். பள்ளியில் நிறைய நண்பர்களை உருவாக்குவதுமாக இருக்க வேண்டும்” எனப் பேசினார். அதே போன்று இந்த தாக்குதலில் சேதமடைந்த குருத்துவாரா ஸ்ரீ குரு சிங் சபாவிற்கு ராகுல் காந்தி பயணம் செய்தார். மேலும் ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “இது மிகப் பெரிய சோகம். பலர் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர். இந்த தாக்குதலால் பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது. நான் மக்களிடம் பேசி அவர்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள முயற்சித்தேன். இந்தப் பிரச்சினையைத் தேசிய அளவில் எழுப்ப மக்கள் என்னிடம் கேட்டுக் கொண்டனர். எனவே நான் அதைச் செய்வேன்” எனப் பேசினார்.