
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி, உச்சிமேடு அடுத்த வெளாங்காட்டு வலசு பகுதியில் உள்ள மேகரையான் தோட்டத்தைச் சேர்ந்தவர் ராமசாமி (75). இவரது மனைவி பாக்கியம்மாள். விவசாயிகளான இவர்கள் இருவரும் மேகரையான் தோட்டத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர். இவரது மகன் முத்தூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த மே 1ஆம் தேதி இரவு ராமசாமி வீட்டிற்கு உள்ளேயும், மனைவி பாக்கியம்மாள் வீட்டிற்கு வெளியேயும் கொலை செய்யப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளனர். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த ஈரோடு மாவட்ட எஸ்பி. சுஜாதா சிவகிரி எஸ்.எஸ்.ஐ. அர்ஜுனன், பெருந்துறை டி.எஸ்.பி. கோகுலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பிரேதத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், நகைக்காக கணவன் மனைவி என இருவரும் அடித்து கொல்லப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்தது. இந்த கொலை குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைப் பிடிக்க 12 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். நகைக்காக முதிய படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. பல அரசியல் கட்சியினரும் கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகள் மூன்று பேரை இன்று போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைப் பிடிப்பதற்காக சிசிடிவி கேமரா காட்சிகளை போலீஸ் ஆய்வு செய்த போது, 3 பேர் ஒன்றன் பின் ஒன்றாக சம்பவ இடத்திற்கு வந்திருந்தது தெரியவந்தது. அதன்படி, அந்த 3 பேர் குறித்த தகவல்களை விசாரிப்பதற்காக விசாரணையை போலீசார் துரிதப்படுத்தினர். தொடர் தேடுதல் வேட்டையில், ஈரோடு மாவட்டம் அரச்சலூரைச் சேர்ந்த ஆச்சியப்பன் (48), மாதேஸ்வரன் (53), ரமேஷ் (52) ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.