
கர்நாடக மாநிலம் மங்களூரு புறநகரின் வளசில் கிராமத்தை சேர்ந்தவர் சுலைமான்; கல்யாண புரோக்கராக இருந்து வந்தார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த முஸ்தபா(30) என்ற இளைஞர் தனது திருமணதிற்கு பெண் பார்த்துத் தரும்படி சுலைமானிடம் கேட்டிருக்கிறார். சுலைமானும் ஒரு பெண்ணை பார்த்துக் கொடுத்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து முஸ்தபாவிற்கும் அந்த பெண்ணிற்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. ஆரம்பத்தில் இவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றாலும், போகப் போக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்திருக்கிறது.
ஒரு கட்டத்தில் இருவருக்கும் சண்டை அதிகரிக்க ஆத்திரமடைந்த அந்த பெண் இரண்டு மாதத்திற்கு முன்பு தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மனைவியை பிரிந்த விரக்தியில் இருந்த முஸ்தபா, தனக்கு நல்ல பொண்ணை பார்த்து புரோக்கர் சுலைமான் திருமணம் செய்து வைக்கவில்லை என்று அவர் மீது கடும் கோபத்தில் இருந்திருக்கிறார். அதனால் அவருக்கு போன் செய்த முஸ்தபா தரைகுறைவாக தீட்டி தீர்த்திருக்கிறார்.
இதையடுத்து புரோக்கர் சுலைமான், முஸ்தபாவை சமாதானம் செய்து வைக்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது கூடவே தனது இரு மகன்களை அழைத்து வந்த சுலைமான், அவர்களை முஸ்தபாவின் வீட்டில் முன்பே நிற்க வைத்துவிட்டு உள்ளே சென்றுள்ளார். அப்போது வீட்டின் உள்ளே சுலைமானுக்கும் முஸ்தபாவிற்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு வீட்டில் இருந்து வெளியே வந்த சுலைமானை வீட்டிலிருந்த கட்டியை எடுத்டு வந்து அவரின் கழுத்தில் குத்தியுள்ளார். இதனைத் தடுக்க வந்த அவரது இரு மகன்களையும் முஸ்தபா தாக்கியதாக கூறப்படுகிறது.
பின்னர் மூவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதில் சுலைமான் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ள நிலையில் அவரது இரு மகன்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருமணமான 6 மாதத்தில் மனைவி பிரிந்து சென்றதால் தனக்கு பெண் பார்த்து கொடுத்த புரோக்கரை இளைஞர் கொலை செய்த சம்பவம் மங்களூரு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.