Skip to main content

“எனது ஓட்டுநர் மட்டும் பிரேக் போடாமல் இருந்திருந்தால்...” - கார் விபத்து குறித்து மம்தா பானர்ஜி

Published on 25/01/2024 | Edited on 25/01/2024
Mamata Banerjee says about on car accident

இந்த ஆண்டு நடைபெறவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜனதா தளம், திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கித் தங்களது ஆதரவைப் பெருக்கி வருகின்றனர்.

இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என நேற்று (24-01-24) திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், கொல்கத்தாவில் ஏற்பட்ட கார் விபத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன. 

பர்த்வானில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரும்புகையில் எதிரே வந்த கார் பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாட்டை இழந்து மம்தா பயணித்த கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது. முன்னதாக ஹெலிகாப்டரில் பயணிக்க மம்தா பானர்ஜி திட்டமிட்ட நிலையில், மோசமான வானிலை காரணமாக அவர் சாலை மார்க்கமாக திரும்புகையில் இந்த விபத்து ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. அதனைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை பெற்றதாகக் கூறப்பட்டது. 

Mamata Banerjee says about on car accident

இந்த கார் விபத்து குறித்து பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “நாங்கள் காரில் சென்றுகொண்டிருந்த போது, எதிர்புறத்தில் வந்த ஒரு வாகனம் எனது காரில் மோத முற்பட்டது. எனது ஓட்டுநர் மட்டும் உடனடியாக பிரேக் போடாமல் இருந்திருந்தால், நான் உயிர் பிழைத்திருக்க மாட்டேன். இந்த திடீர் பிரேக்கால், டேஷ்போட்டில் அடிப்பட்டு சிறு காயமடைந்தேன். மக்களின் ஆசியால் நான் பாதுகாக்கப்பட்டேன்” என்று குறிப்பிட்டிருந்தார். 

சார்ந்த செய்திகள்