Skip to main content

பெண் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு ; வெள்ளியங்கிரி மலையேற தடை

Published on 25/05/2025 | Edited on 25/05/2025
Woman lose their live; Velliangiri hill station closed

வெள்ளியங்கிரி மலையில் ஏற தடை விதிப்பதற்கான அறிவிப்பு வெளியான நிலையில் மலை ஏறிய பெண் உள்ளிட்ட இருவர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அண்மையாகவே கோவை மாவட்டம் வெள்ளியங்கிரியில் மலை ஏறுபவர்கள் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. இதற்காகவே வனத்துறை சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு மலை அடிவாரத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதய பிரச்சனை உள்ளவர்கள்; இணை நோய் பாதிப்புகள் உள்ளவர்கள் மலை ஏற வேண்டாம் என அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வார இறுதி நாட்களில் அதிக அளவில் மக்கள் மலையேறி வருகின்றனர்.

இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வெள்ளியங்கிரி மலையில் ஏறுவதற்கு தடை விதிக்கப்பட்டு அதற்கான அறிவிப்பு வெளியாகி இருந்தது. ஏழு மலைகளைக் கொண்ட வெள்ளியங்கிரியில் ஒவ்வொரு மலையும் ஒவ்வொரு சூழ்நிலையை கொண்டது. எனவே மலையேற்றம் என்பது கடினமானது என அங்கு வரும் பக்தர்களுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தல் கொடுத்து வருகின்றனர்.

இன்று மூன்று பெண்கள் வெள்ளிங்கிரி மலை ஏற்றத்திற்கு சென்ற நிலையில் 2 பேர் திரும்பி விட்டனர். மூன்றாவது பெண் ஒருவர் ஏழாவது மலையில் ஆக்சிஜன் அளவு கம்மியாக இருந்ததால் மூச்சுத்திணறி உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. உயிரிழந்த பெண்ணின் பெயர் கவுசல்யா (45) என்பதும், காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. அதேபோல் ஐந்தாவது மலையில் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த ஒருவரும் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.

வெள்ளியங்கிரி மலை ஏற்றத்தில் ஈடுப்பட்ட இருவர் ஒரே நாளில் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 

சார்ந்த செய்திகள்