Skip to main content

செந்தில் பாலாஜி கைது தலைப்பு செய்தியாகக் கூடாது; திட்டமிட்டுச் செயல்படுத்திய அமலாக்கத் துறை - மூத்த பத்திரிகையாளர் பாண்டியன்

Published on 17/06/2023 | Edited on 17/06/2023

 

 Tamizha Tamizha Pandian Interview

 

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அமலாக்கத் துறையின் நடவடிக்கைகளுக்கு எதிராக திமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு அவை விசாரணையில் இருக்கின்றன. இந்நிலையில், செந்தில் பாலாஜியின் கைது தொடர்பாக  மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியனை சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம். அதற்கு அவர் அளித்த பதில்கள் பின்வருமாறு...

 

செந்தில் பாலாஜி முழு ஒத்துழைப்பு தருகிறேன் எனச் சொன்ன பிறகும் அவருக்கு நெஞ்சுவலி வரும் அளவிற்கு நெருக்கடி கொடுத்திருக்கிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறாரே?

 

தினசரி செய்தித்தாள்களில் செந்தில் பாலாஜி கைது என்ற விசயம் காலையில் தலைப்புச் செய்தியாக வந்துவிடக் கூடாது என்று அமலாக்கத் துறையினர் மிகவும் கவனமாக இருந்துள்ளனர். ஏனென்றால் அதிகாலை 1 மணிக்கு மேல் தான் அனைத்து முன்னணி பத்திரிகைகளும் தலைப்புச் செய்திகளை அச்சடித்து அனுப்புவார்கள். அதைக் கருத்தில் கொண்டுதான் அதிகாலை 2:30 மணி அளவில் அனைத்து பத்திரிகை, செய்தி ஊடகங்களையும் அமலாக்கத் துறையினர் அலுவலகத்திற்கு வாருங்கள் என்று அழைக்கிறார்கள்.

 

ஆனால், அதுவரை அமலாக்கத் துறையினர் செந்தில் பாலாஜியின் கைதைப் பற்றி தெரிவிக்கவில்லை. அதன் பிறகு தான் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதி, உடல்நலக் குறைபாடு போன்ற செய்திகள் அனைத்துமே அடுத்த நாள் காலையில் வருகிறது. இதன் மூலம், அமலாக்கத் துறையினர் யாருடைய கட்டளைக்காகவோ காத்திருப்பதாகத் தெரிகிறது. செந்தில் பாலாஜிக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்ட போதும் அமலாக்கத் துறையினர் அவரை நம்பாமல் எய்ம்ஸ் மருத்துவக் குழு சோதித்தால்தான் நம்புவோம் என்று  சொல்லுகிறார்கள்.

 

செந்தில் பாலாஜி 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த போது அதிமுக தொழிற்சங்க மாவட்டச் செயலாளர்கள் மூலம் பணம் வாங்கப்பட்டது என்ற புகாரின் பேரில்தான் இந்த வழக்கு போடப்பட்டது. பின்பு திமுகவின் அமைச்சரான செந்தில் பாலாஜி அந்தப் பணத்தை திருப்பிக் கொடுக்கத் தயாராக இருந்தபோதும் அந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், பணத்தைக் கொடுத்த சாதாரண மக்கள் உச்சநீதிமன்றம் வரை செல்ல வாய்ப்பு இல்லை. ஆக, இதற்குப் பின்னால் அரசியல் இருக்கிறது என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும்.

 

தற்போது செந்தில் பாலாஜிக்கு நெருக்கடி கொடுக்க என்ன தேவை இருக்கிறது என்று பார்த்தால் திமுகவின் முதுகெலும்பாக இருக்கிறார் அவர். பல தேர்தல்களில் திமுக வெற்றி பெறுவதற்கு செந்தில் பாலாஜியின் பங்கு முக்கியமாக இருக்கிறது. அது தான் பாஜகவிற்கு மிகுந்த நெருக்கடியாக இருந்துள்ளது. தமிழகத்தில் 38 எம்.பி.க்களை வைத்திருக்கிற திமுக, வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறக் கூடாது என்பது பாஜகவின் நிலைப்பாடு. ஆனால், 38 சீட்களையும் வெற்றி பெறுவதற்கு திமுகவிற்கு பக்கபலமாக இருப்பது செந்தில் பாலாஜி.

 

செந்தில் பாலாஜியை முடக்கினால் தான் திமுகவை முடக்க முடியும் என்ற நோக்கத்தில் அவருடைய இந்த இரண்டு ஆண்டுகளில் ஏதாவது ஊழல் நடந்திருக்கலாம் என்று அமலாக்கத் துறையின் மூலம் கிட்டத்தட்ட 40 இடங்களில் சோதனை நடத்தியுள்ளனர். தலைமைச் செயலகம் வரை சோதனை நடத்தியும் எந்த ஆவணங்களும் கிடைக்காததால் செந்தில் பாலாஜியின் பழைய வழக்கான 2011 ஆம் ஆண்டு நடந்த ஊழல் வழக்கை வைத்துக் கொண்டு செந்தில் பாலாஜியின் அரசியல் வாழ்க்கையை முடிக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

 

வருமானவரி துறையினர்கள் எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் மீது மட்டும் சோதனை நடத்துவார்களே தவிர பாஜகவினர்களை சோதனை நடத்தமாட்டார்கள். பக்கத்து மாநிலமான புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியில் இருந்த ஜான் குமார் மற்றும் அவருடைய மகனும் பாஜகவிற்கு மாறிய பிறகு பாஜகவின் எம்.எல்.ஏவாக இருக்கிறார்கள். முன்னாள் முதல்வர் நாரயணசாமி தலைமையில் ஆட்சி நடந்த போது அவருக்கு பக்கபலமாக அதிக இடங்களை பெற்றுத் தந்தவர் ஜான் குமார். அந்த ஜான் குமாரை முடக்க வேண்டும் என்பதற்காக அவரது வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர் பாஜகவினர். அதன் பிறகு, அந்த சோதனைக்கு பயந்து பாஜகவில் தான் மட்டுமல்லாமல் தனது மகனையும் இணைத்துக் கொண்டுள்ளார். பின்பு, அவருக்கும் அவரது மகனுக்கும் எம்.எல்.ஏ சீட்களை கொடுத்துள்ளனர் பாஜகவினர்.

 

அதே போல, புதுச்சேரியில் உள்ள தி.மு.க எம்.எல்.ஏ வெங்கடேசன், காங்கிரஸ் சபாநாயகர் சிவகொழுந்து, மற்றும் அவரது தம்பி ராமலிங்கம் போன்றவர்கள் வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர். ஜான் குமாரை போல இவர்களும் பயந்து பாஜகவில் இணைத்து கொண்டுள்ளார்கள். இப்படி 4 எம்.எல்.ஏக்களை தன்வசப்படுத்தியுள்ளனர் பாஜகவினர். இதன் வெளிப்பாடாக நாரயணசாமி ஆட்சி கவிழ பாஜக முக்கியக் காரணமாக இருந்துள்ளது. இப்படித்தான் பாஜக புதுச்சேரியில் வளர்ந்துள்ளது. இதே போன்ற சூத்திரத்தைத் தான் தமிழகத்திலும் செயல்படுத்த பாஜக முன்னெடுத்து வருகிறது. ஆனால், செந்தில் பாலாஜியை பொருத்தவரையில் தனது கடைசி காலம் வரைக்கும் திமுகவில்தான் என்று உறுதியாக இருப்பார்.