Skip to main content

"பாலத்தை சரிசெய்ய எலக்ட்ரானிக்ஸ் கம்பெனிக்கு ஒப்பந்தம்; தூக்குப் பாலத்தைக் காட்டி வாக்கு பலத்தை அதிகரிக்கப் பார்த்தார்கள்..." - இள.புகழேந்தி பொளேர்

 

jkl

 

அண்மையில் குஜராத்தில் நடந்த தொங்கு பால விபத்தில் 150க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். பராமரிப்பு பணி நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் அவசர கதியில் பாலம் திறக்கப்பட்டதே இந்த விபத்துக்குக் காரணம் என்று பலரும் மாநில அரசு மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில் 9 நபர்களை மாநில அரசு கைது செய்துள்ளது. இதுதொடர்பாக மாநில அரசின் மீது விமர்சனம் வந்துள்ள நிலையில் இதற்குப் பொதுமக்களே பொறுப்பு, அவர்கள் அஜாக்கிரதையே இந்த விபத்துக்குக் காரணம் என்று பாஜகவினர் கூறி வருகின்றனர். இதுதொடர்பாக திமுக பிரமுகர் இள.புகழேந்தியிடம் நாம் கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

 


குஜராத் பால விபத்தில் இறந்தவர்களைச் சந்தித்து பிரதமர் ஆறுதல் தெரிவிக்க தற்போது சம்பவம் நடைபெற்ற இடத்திற்குச் சென்றுள்ளார். விபத்து நடைபெற்ற இடத்தை அதிகாரத்தில் இருப்பவர்கள் நேரில் சென்று பார்ப்பதும் பாதிக்கப்பட்ட மக்களிடம் ஆறுதல் தெரிவிப்பதும் வழக்கமான நடைமுறையாகத்தானே இருக்கிறது. எதற்காக எதிர்க்கட்சிகள் கேலி கிண்டல் செய்கின்றன?

 

இன்றைக்கு அவர் அங்கு செல்லும் நிலையில் அவரை வர வேண்டாம் என்று அம்மாநில மக்களே உரக்கச் சொல்கிறார்கள். ட்விட்டரில் ‘கோ பேக் மோடி’ என்ற ஹேஷ் டேக்கை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பயன்படுத்தி தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். முன் எப்போதும் இல்லாத வகையில் இது ஆளுங்கட்சிக்குக் கடும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இந்தப் பாலம் தொடர்பாக நாம் தெளிவாகப் பேச வேண்டும் முதலில். இந்தப் பாலம் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டு ஏறக்குறைய 100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இடையில் பழுதடைந்த காரணத்தால் அதனைச் சரிசெய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனால் இடையில் பொதுமக்கள் கோரிக்கை ஏற்கப்பட்டு பாலம் சீர்செய்யப்பட்டு வந்தது. இதற்கிடையே திடீரென கடந்த 27ம் தேதி இப்போது கண்ணீர் வடிக்கும் இந்த மோடி அந்தப் பாலத்தைத் திறந்து வைத்தார். அவர் திறந்து வைத்த இந்தப் பாலம் மூன்று நாட்களைக் கூட தாக்குப் பிடிக்காமல் 31ம் தேதி இரவு கீழே விழுந்துள்ளது.

 


இந்தப் பாலத்தைச் சீர் செய்ய முதலில் என்ன நடவடிக்கையை இந்த அரசு எடுத்தது. 2 கோடி ரூபாய் நிதியைப் பாலத்தைச் சீர் செய்கிறோம் என்று ஒதுக்கினீர்களே அதன்படி முறையாகப் பாலம் சீர் செய்யப்பட்டதா? இந்தப் பாலத்தைச் சீர் செய்ய எடுத்த ஒப்பந்ததாரர் யார் என்று முதலில் பார்க்க வேண்டும். எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்துக்கு இந்தப் பணி வழங்கப்பட்டுள்ளது. மோடிக்குத் தெரிந்த நிறுவனம் என்ற அடிப்படையில் வழங்கப்பட்ட ஒப்பந்தமே இத்தனை பேர் இறக்கக் காரணமாக அமைந்துவிட்டது. இவர்களுக்கு எவ்வளவு கமிஷன் கிடைக்கப் பெற்றதோ என்பது அவர்களுக்கு மட்டுமே வெளிச்சம். ஆனால் இத்தனை உயிர்கள் காவு கொடுக்க இவர்களின் அலட்சியம் ஒரு காரணமாக அமைந்துவிட்டது. இதனை யாரும் மன்னிக்க முடியாது. 

 

எத்தனை உயிர்கள் இந்தச் சம்பவத்தில் பலியாகி இருக்கிறார்கள். குழந்தைகள், பெண்கள் எனப் பிணங்களைப் பார்த்தால் நெஞ்சம் நடுங்கிப்போகும் அளவிற்கு இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. இதற்கு யார் பொறுப்பேற்பார்கள்? மோடி பொறுப்பேற்று இந்நேரம் பதவி விலகி இருக்க வேண்டாமா? அப்படிச் செய்வாரா என்று நாம் எதிர்பார்த்தால் ஏமாந்துதான் போக வேண்டும். அவர் மீது உள்ள கோபத்தால் தான் இன்றைக்கு அந்த மக்கள் நீங்கள் எங்கள் மாநிலத்துக்கே வர வேண்டாம் என்று கூக்குரல் எழுப்பி வருகிறார்கள். தேர்தல் நேரத்தில் தூக்குப் பாலத்தைக் காட்டி வாக்குகளை வாங்கலாம் என்ற இவர்களின் எண்ணத்தால் இத்தனை உயிர்களை நாம் இழந்து தவித்துக்கொண்டிருக்கிறோம். 

 

இவர்களுக்கு அந்த மக்களே சரியான தண்டனையைக் கொடுப்பார்கள். தங்கள் மீது உள்ள குற்றத்தை ஒப்புக்கொள்ளாத இவர்கள், பிற மாநிலங்களில் குறிப்பாக இவர்கள் ஆளாத மாநிலங்களில் நடக்கும் இயற்கைப் பேரிடர்களுக்குக் கூட ஆளும் அரசுதான் காரணம் என்று கூறுவார்கள். கடந்த தேர்தலில் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில் ஒரு பழமையான பாலத்தை வைத்து பிரதமர் அரசியல் செய்தார். இவர்களுக்கு எந்த ஒரு நிகழ்ச்சியிலும் அரசியல் செய்யத்தான் தெரியும். மக்களைப் பற்றிச் சிந்திக்க மாட்டார்கள். இதுபற்றிய எண்ணமும் அவர்களுக்கு இல்லை. 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !