Skip to main content

ஆளுநருக்கு அதிமுக காவலா? அதிமுகவுக்கு ஆளுநர் காவலா?

Published on 26/06/2018 | Edited on 26/06/2018

ஆளுநரைப் பற்றி சட்டப்பேரவையில் பேசக்கூடாது என்று பேரவை விதிகளை 1999ஆம் ஆண்டு மாற்றியது திமுக என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது உண்மையா என்பதை திமுக விளக்கட்டும். ஆனால், அந்த விதிகளை திமுக ஏன் மாற்றியிருக்கும் என்பதற்கு மட்டும் காரணம் எல்லோருக்கும் தெரியும்.

 

admk governor



1993ஆம் ஆண்டு அன்றைக்கு முதல்வராக இருந்த ஜெயலலிதா மற்றும் அவருடைய தோழி சசிகலாவின் ஆட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு போய்க்கொண்டிருந்த நேரம். தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார் சென்னாரெட்டி. ஆந்திராவில் மூன்றுமுறை முதல்வராக இருந்த அவரை, அந்த மாநில அரசியல் காரணமாக ஆளுநராக நியமித்தார் பிரதமர் நரசிம்மராவ். 1993 ஆகஸ்ட் மாதம் சென்னை எழும்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. ஆளுநராக இருந்த சென்னாரெட்டி பதறியடித்து ஓடிவந்து நேரடியாக கள ஆய்வு செய்தார். ஆளுநர் அங்கு சென்றதற்கு, ஜெயலலிதா கடுமையான ஆட்சேபணை எழுப்பினார். ஜெயலலிதா விட்டுவிடவில்லை

அதைத் தொடர்ந்து ஆளுநர் மாநில அரசு அதிகாரத்தில் தலையிடுவதாக ஜெயலலிதா பலமுறை குற்றம்சாட்டினார். அவரை ஜெயலலிதா மரியாதைக்குக் கூட சந்திப்பதில்லை. இதற்கு காரணம் ஜெயலலிதாவுக்கு எதிராக சுப்பிரமணியன் சாமி வழக்குத் தொடர மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஆளுநர் ஒத்துழைப்பு கொடுத்தார். சுப்பிரமணியன் சாமி கொடுத்த புகார் மனுக்களைப் பெற்றுக் கொண்டது மட்டுமின்றி, அவற்றை விசாரிக்கவும் தொடங்கிவிட்டார்.

 

 


இந்நிலையில், 1995ல் மதுரை காமராஜ் பல்கலைகழக பட்டமளிப்பு விழாவிற்குச் சென்ற சென்னாரெட்டி மாவட்ட அதிகாரிகளை விருந்தினர் மாளிகைக்குக் கூப்பிட்டுச் சில விவரங்கள் கேட்டார். அதையும் எளிதில் விடவில்லை ஜெயலலிதா. ஆளுநரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து ஆளுநருக்கும், பிரதமருக்கும் கடிதம் எழுதினார். சென்னாரெட்டி வாகன அணிவகுப்பைத் திண்டிவனம் அருகே வழிமறித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி ஷாக் கொடுத்தனர்.

  mk stalin



அதைத் தொடர்ந்து, ஆளுநருக்கு உரிய மரியாதையை ஜெயலலிதா கொடுப்பதில்லை என்ற விமர்சனம் பரவத்தொடங்கியது. எனவே, 1995ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் ஆளுநரை ஏன் சந்திப்பதில்லை என்பதற்கு அபாண்டமான காரணத்தை வெளியிட்டார் ஜெயலலிதா. ஆளுநர் மாளிகைக்கு ஒருமுறை சென்றபோது, ஆளுநர் தன்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக பேரவையிலேயே தெரிவித்தார். இதையடுத்து அன்றைக்கு நிதியமைச்சராக இருந்த நெடுஞ்செழியன் ஆளுநரைக் கண்டித்து சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்தார். அந்தத் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தப்பட்டு, அது நிறைவேற்றப்பட்டது.

ஆனால், இப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை அதிமுக அரசு எதிர்க்க அஞ்சுகிறது. அவர் சட்டப்படிதான் ஆய்வு நடத்துவதாக முதல்வரும் அமைச்சர்களும் சப்பைக்கட்டு கட்டுகிறார்கள். ஆளுநரோ ஒருபடி மேலே போய் எதிர்க்கட்சிகளை நேரடியாகவே மிரட்டும் தொனியில் அறிக்கை வெளியிடுகிறார்.

 

 


இதைக் கண்டிக்க வேண்டிய அதிமுக அமைதியாக இருக்கிறது. ஆனால், மாநில சுயாட்சிக்காக தொடர்ந்து குரல் எழுப்பும் திமுக ஆளுநரைக் கண்டித்து தீவிரமாகப் போராடுகிறது. திமுகவின் போராட்டத்தை அடக்க ஆளுநரே நேரடியாக அதிகாரத்தை கையில் எடுக்கிற அளவுக்கு போயிருக்கிறார். தனது பணிகளைத் தடுத்தால் 7 ஆண்டுகள் சிறை என்று அவர் மிரட்டியிருக்கிறார்.

நெருக்கடி நிலையில் மிசா சட்டத்துக்கே பயப்படாத கட்சி திமுக. ஆளுநரின் மிரட்டலுக்கெல்லாம் பயப்படாது என்று மு.க.ஸ்டாலின் தெளிவாக அறிவிதார். இந்த விவகாரத்தை பேரவையில் பேச முயற்சித்தபோது ஆளுநரைப் பற்றிப் பேச பேரவை விதிகளில் இடம் இல்லை என்று சபாநாயகர் தனபால் கூறுகிறார்.

  jeyakumar



சபாநாயகரின் இந்த மறுப்பு விவாதம் ஆனவுடன், இப்போது, ஆளுநரைப் பற்றி பேச தடைவிதிக்கும் விதிகளை மாற்றியதே திமுகதான் என்று ஜெயக்குமார் கூறியிருக்கிறார். 1999 ஆம் ஆண்டு திமுக இந்த விதிகளைத் திருத்தியதாக ஜெயக்குமார் கூறுகிறார். அப்படியானால் இது மாற்றமுடியாத விதி அல்லவே. 1999 ஆம் ஆண்டு ஆளுநராக இருந்தவர் ஜெயலலிதாவின் தோழியான பாத்திமா பீவிதான். அவருக்கு எதிராக பேசுவதை ஏன் திமுக விரும்பவில்லை என்பது புரியவில்லை. அதையும்கூட ஜெயக்குமாரே கூறியிருக்கலாம். அனேகமாக அதிமுகவினர் யாரும் ஆளுநரை அசிங்கமாக பேசிவிடக்கூடாது என்பதற்காக திமுக செய்திருக்கலாம் என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது.

 

 


ஆளுநரைப் பற்றிப் பேசத்தான் பேரவை விதிகளில் இடமில்லை. சரி போகட்டும். எஸ்.வி.சேகரைப் பற்றி பேசவும், குட்கா ஊழலைப் பற்றி பேசவும்கூட ஏன் சபாநாயகர் தடை விதித்தார் என்பதற்கும் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கலாமா?