Skip to main content

இதில் ஒன்று குறைந்தால் கூட... ஆட்சியமைக்க எத்தனை தொகுதிகள் தேவை???

Published on 22/04/2019 | Edited on 22/04/2019

மொத்தமுள்ள 234 தொகுதிகளில் தற்போதைய நிலவரப்படி, அதிமுகவில் 114, திமுகவில் 97, சுயேட்சை 1 என மொத்தம் 212 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். 22 தொகுதிகள் காலியாக உள்ளது.
 

dmk admk



இதில் 18 தொகுதிகளுக்கு ஏப்ரல் 18 தேர்தல் நடைபெற்றது, மீதமிருக்கும் 4 தொகுதிகளுக்கு மே 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான முடிவுகள் மே 23ம் தேதி வெளியிடப்படுகிறது. 
 

இந்நிலையில் அதிமுக தனது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளவும், திமுக ஆட்சியை கைப்பற்றவும் மிகுந்த முயற்சிகளை எடுத்துவருகிறது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 118 தொகுதிகள் கைவசம் இருந்தால்தான் ஆட்சியமைக்க முடியும். அதிமுக கூட்டணியிலிருக்கும் 114 எம்.எல்.ஏ.க்களில் அதிமுக 111 + தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு (இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணி கட்சியினர்) ஆகியோர் இருக்கின்றனர். திமுகவில், திமுக 88, காங்கிரஸ் 8, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1 மொத்தம் 97பேர் உள்ளனர். காலியாக 22 தொகுதிகள் உள்ளன. 


அதிமுக ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள மொத்தம் 10 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும். ஏனென்றால் கூட்டணியில் இருக்கும் தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோர் அதிமுகவிற்கு எதிரான மனநிலையில் உள்ளனர். அதேநேரம் அதிமுகவில் இருக்கும் கலைச்செல்வன்(விருதாச்சலம்), ரத்தினசபாபதி(அறந்தாங்கி), பிரபு(கள்ளக்குறிச்சி) ஆகிய எம்.எல்.ஏ.க்கள் வெளிப்படையாகவே தினகரனை ஆதரிக்கின்றனர். ஒருவேளை இவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஆதரவளிக்கவில்லையென்றால் அதிமுகவின் எண்ணிக்கை 108 ஆக குறைந்துவிடும். இதனால்தான் 10 தொகுதிகளில் வெற்றி தேவை. 

 

dmk admk



திமுக கூட்டணி இணக்கமாகவே இருக்கிறது. ஆதலால் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைக்க, மொத்தம் 21 தொகுதிகளில் வென்றாக வேண்டும் (திமுக கூட்டணி 97 +21=118). அப்படி வெற்றிபெற்றால் அவர்கள் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க முடியும். இவற்றில் ஒன்றிரண்டு குறைந்தாலும் கடினமாகிவிடும். 


இந்த முடிவுகளை மாற்றும் சக்திகளாக இருப்பது அமமுக, மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகள். இந்தக் கட்சிகளின் வாக்கு வங்கிகள் பல இடங்களில் வெற்றி, தோல்விகளை முடிவு செய்யும். ஒருவேளை இவர்கள் சில தொகுதிகளைக் கைப்பற்றினால், அவர்களின் ஆதரவைக் கேட்கக்கூடும். நடைமுறை அரசியலில் அது சாத்தியமற்றதாகவே இருக்கும். ஆதலால் அவரவர் தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் கட்டாயத்தில் இருக்கின்றனர். 


அரசியல் என்பதே பல்வேறு திருப்புமுனைகளையும், அதிர்ச்சிகளையும் கொண்டதுதான். இவையெல்லாம் மே23 அன்று தெரியவரும், காத்திருப்போம்...