Skip to main content

எஸ்.பி.பி-க்கு நடிகர் மோகன் இரங்கல்!

Published on 26/09/2020 | Edited on 26/09/2020
mohan

 

 

'பாடும் நிலா பாலு' என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம் (74 வயது) மறைந்தார்.

 

கரோனா பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் 5- ஆம் தேதி சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். அதைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.மேலும் எக்மோ மற்றும் உயிர்காக்கும் பிற கருவிகளுடன் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் எஸ்.பி.பி. உயிர்பிரிந்தது. நேற்று மதியம் 01.04 மணிக்கு எஸ்.பி.பி உயிர் பிரிந்ததாக எஸ்.பி.பி . சரண் தெரிவித்துள்ளார். 

 

அவருடைய மறைவிற்கு இந்திய அரசியல் தலைவர்கள் மற்றும் அனைத்து திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் மோகன் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். “இன்று(25-09-20) இசையுலகிற்கு ஒரு கருப்பு தினம். ஏனென்றால், பாடும் நிலா நம்மை விட்டு மறைந்துவிட்டார். 45,000-க்கும் அதிகமான பாடல்களைப் பாடி நம்மை எல்லாம் மகிழ்த்தவர் இன்று நம்மிடம் இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை. இந்த இழப்பை எந்த வார்த்தைகளைப் போட்டு நிரப்புவது என்று தெரியாமல் அல்லாடுகிறேன். எஸ்பிபி சார் செய்த சாதனைகளை இனிமேல் யாராவது செய்ய முடியுமா என்று தெரியவில்லை.

 

அவருடைய இசைப்பயணத்தில் எனக்கும் சில பாடல்களைப் பாடியுள்ளார் என்று நினைக்கும் போது மகிழ்ச்சி. முதல் பாடலிலிருந்து கடைசியாக பாடிய பாடல் வரை அவருடைய குரல் ப்ரெஷ் ஆகவே இருக்கும். அதே போல் அனைவருக்குமே எதிரிகள் என்று யாராவது இருப்பார்கள். எனக்கு தெரிந்தவரை எதிரிகளே இல்லாத மனிதர் எஸ்.பி.பி சார்.அது மிகவும் அபூர்வம். அந்தளவுக்கு அனைவருடனும் மிகவும் நட்பாக பழகக்கூடியவர்.

 

80களில் எல்லா ஹீரோக்களுக்கும் எஸ்.பி.பி சார் பாடல்களே அமைந்திருக்கும். என்னுடைய படங்களிலும் அவர்தான் பாடியிருப்பார். அவர் குரலின் மேஜிக் என்னவென்றால், எஸ்.பி.பி. சார் யாருக்குப் பாடினாலும் அவர்களே பாடுவது போல் இருக்கும். அப்படித்தான் எனக்கும் அமைந்தது. அவர் பாடிய பல பாடல்களுக்கு நான் நடித்திருக்கிறேன் என்பது எனக்கு பெருமையான விஷயம்.

 

இன்னும் பல நூறு ஆண்டுகளானாலும் அந்தக் குரல் மூலம் நமக்கு சந்தோஷத்தைக் கொடுத்துக்கொண்டே இருப்பார்.அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திருக்கிறேன்.. அவர் குடும்பத்தாருக்க்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்