கரூர் மாவட்டம் நெரூர் என்ற கிராமத்தில் ஒரு சபா உள்ளது. இந்த சபாவில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் ஒரு நாளில் அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்று வந்துள்ளது. அந்த நாளில் உணவு சாப்பிட்ட எச்சில் இலையில் பக்தர்கள் உருண்டு அங்கப்பிரதட்சணம் செய்து வந்தனர். இத்தகைய சூழலில் தான் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளான மணிக்குமார், வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது அந்த தீர்ப்பில் எச்சில் இலைகளில் படுத்து உருளுவதற்குத் தடை விதிக்கப்பட்டது.
இதனையடுத்து எச்சில் இலைகளின் மீது அங்கப்பிரதட்சணம் செய்யும் சடங்குக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தனி நீதிபதியான ஜி.ஆர். சுவாமிநாதன் அமர்வு முன்பு மே 15 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “இது மதம் சார்ந்த விவகாரம். இதில் நீதிமன்றம் தலையிட வேண்டியது இல்லை. மேலும் இதற்கு எந்த அனுமதியும் கேட்க வேண்டியது இல்லை. பொதுவாக விழாக்களில் அனுமதி கேட்பது என்பது தொடர்ந்து வருகிறது. அவ்வாறு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. அங்கு பொருத்தப்படக் கூடிய ஒலிபெருக்கி வெளியில் ஏற்படக்கூடிய சட்ட ஒழுங்கு பிரச்சனை தொடர்பாக மட்டுமே காவல்துறையிடம் அனுமதி பெற்றுக் கொள்ளலாம். எனவே இந்த விழாவை நடத்திக் கொள்ளலாம்” என உத்தரவிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து இந்த உத்தரவைப் பின்பற்றி இந்த விழாவும் நடத்தப்பட்டது. இந்த விழா நடத்தப்பட்ட பின்பு சர்ச்சையும் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கரூர் மாவட்ட ஆட்சியர் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில் மாவட்ட ஆட்சியர் சார்பில் தெரிவிக்கையில், “கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கப்பிரதட்சணம் செய்வதால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதற்கு நாங்கள் எந்த அனுமதியும் வழங்கப்படுவதில்லை. மேலும் இது சம்பந்தமாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உத்தரவு ஒன்றும் உள்ளது. இந்த உத்தரவுகளை எல்லாம் மறைத்து மனுதாரர் தனக்குச் சாதகமான உத்தரவைப் பெற்று விட்டார். எனவே தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் நீதிபதி ஆர். சுரேஷ்குமார் அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (12.06.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு மற்றும் எதிர்த் தரப்பு சார்பிலும் இந்த வழக்கில் விரிவான விசாரணை செய்ய வேண்டி உள்ளதால் வழக்கு விசாரணைக்குக் கால அவகாசம் கேட்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை ஜூன் 25 ஆம் தேதி (25.06.2024) மதியம் 02.15 மணிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர். மேலும் அப்போது இரு தரப்பு வாதங்களையும் விரிவாக நடத்திக் கொள்ளலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.