கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலின் போது திருநெல்வேலி மக்களவைக்குப் போட்டியிட்ட தி.மு.க.வின் கூட்டணி சார்பில் நின்ற தி.மு.க.வின் ஞானதிரவியம் 5,22,623 வாக்குகள் பெற்று எம்.பி.யானார். அவரை எதிர்த்து பா.ஜ.க. அ.தி.மு.க. கூட்டணியில் அ.தி.மு.க.வின் மனோஜ் பாண்டியன் 3,37,166 வாக்குகள் பெற்றார்.
தற்போதைய திருநெல்வேலி தொகுதியில் தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸின் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் 5,02,296 வாக்குகள் (கடந்த தேர்தலை விட 20,327 வாக்குகள் குறைவாக) பெற்று வெற்றி கண்டார். அவரோடு தனியாக மல்லுக்கு நின்ற பா.ஜ.க.வின் நயினார் நாகேந்திரன் கிட்டத்தட்ட மலைக்க வைக்கிற அளவுக்கு கிராசிங்காக 3,36,676 வாக்குகளைப் பெற்றிருக்கிறார். இது தேர்தலில் வேட்பாளர்கள் பெற்றவாக்குகளின் கணக்கு பொதுவாகப் பார்க்கப்பட்டாலும், தமிழகம் முழுக்க 39+1 - 40 தொகுதிகளிலும் போட்டியிட்ட தி.மு.க. கூட்டணி 100க்கு 100 என்று 40 தொகுதிகளையும் ஒட்டு மொத்தமாக அள்ளினாலும், நெல்லையில் பா.ஜ.க.வின் நயினார் நாகேந்திரன், கூட்டணி பலமின்றி ஒற்றை நபராகக் களத்தில் இத்தனை (336676) அளவுக்கு க்ராசிங்காக வந்ததை திகைப்புடன் பார்க்கிறதாம்.
தமிழகத்தின் பிற தொகுதிகளில் பா.ஜ.க. போட்டியிட்டு வாக்குகளைப் பெற்றாலும் குறிப்பாக திருநெல்வேலி தொகுதியில் பா.ஜ.க.வின் நயினார் நாகேந்திரன் இந்த அளவுக்கு ரீச்சானதின் பின்னணியை ஏற்கனவே தி.மு.க. தலைமை சந்தேகக் கண்களோடு தான் ஆரம்பம் முதலே கண்காணித்து வந்தது. இதன் பின்னணியில் உள்ளடி இருப்பதை மேலோட்டமாக உறுதிபடுத்திய தி.மு.க.வின் தலைமை, தேர்தல் ஆரம்ப காலகட்டங்களில் நடந்தவைகளையும், கட்சியின் குறிப்பிட்ட தரப்பினரின் தேர்தல் பணிகளில் ஏற்பட்ட தொய்வுகள் பற்றி நெல்லை மாநகர மாவட்ட கட்சியினர் தலைமைக்கு அனுப்பிய புகார்கள் என்று இரண்டையும் ஒப்பீடாக எடுத்துக் கொண்டு விசாரணைக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருப்பதால் நெல்லை மாநகர தி.மு.க அளவில் தலைமையின் நடவடிக்கை பாயலாம் என்ற கலக்கமிருப்பதைச் சுட்டிக்காட்டுகிற தி.மு.க.வின் அடிமட்டத் தொண்டர்களே, இனி வரும் காலத்தில் அது உள்ளடிகளில்லாத தேர்தல் பணிகளுக்கு உத்தரவாதமாகும் என்பவர்களே திருநெல்வேலி எம்.பி. தேர்தலில் தி.மு.க.வில் நடந்த உள்குத்துகளைப் பற்றி விவரித்தார்கள்.
தேர்தல் அறிவிப்பு வெளியான நேரத்தில் நெல்லையில் பா.ஜ.க. தனித்து போட்டியிட வாய்ப்பில்லை. ஏனெனில் அது ஒற்றையாக களம் காண்கிற அளவுக்கு தொகுதியில் பேஸ்மெண்ட் கிடையாது என்று பரவலாகப் பேசப்பட்டது. இதற்கிடையே நான் தான் பா.ஜ.க.வின் திருநெல்வேலி வேட்பாளர் என்று நயினார் நாகேந்திரன் தனக்குத்தானே அறிவித்துக் கொண்டதுமில்லாமல் ஸ்ட்ரெயிட்டாக தேர்தல் பிரச்சாரத்திலிறங்கியதை பிற கட்சிகள் வியப்புடன் பார்த்தன. பா.ஜ.க.விற்கான தகுதியான வேட்பாளர்கள் சிக்காமல் போனதால் வேறு வழியின்றி பா.ஜ.க. நயினார் நாகேந்திரனை வேட்பாளராக அறிவிக்க வேண்டிய நிலை.
தேர்தலில் ஜெயித்தால் மத்திய அமைச்சராகி விடலாம் என்ற திட்டத்தில் அதற்கான மூவ்களை மேற்கொண்ட நயினார் கரன்சியை தாமிரபரணியாய் தொகுதியில் ஓடவிட்டவர், தனக்கான இமேஜை அதிகரித்துக் கொள்ள நெல்லை எம்.பி. தொகுதிக்குட்பட்ட நெல்லை அம்பை என்று இரண்டு தொகுதிகளிலும் அடுத்தடுத்து பிரதமர் மோடியின் பொதுக் கூட்டத்தையும் நடத்தி பிரம்மாண்டப் படுத்தியிருக்கிறார். மேலும் தனக்கான வாக்குபலத்தை அதிகரித்துக் கொள்ள தொகுதியில் தான் சார்ந்த சமூக வாக்குகளை ஒருங்கிணைத்தால் மேக்சிமம் ரீச் ஆகிவிடலாம், பிற சமூக மக்களையும் தன் பக்கம் திருப்பினால் வெற்றிக் கோடு அருகில் என்ற ப்ளானில் அம்பை தொகுதியின் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான இசக்கி சுப்பையாவின் துணையுடன் ஸ்வீட் பாக்ஸ்களை தேவையான அளவிற்கு ஏரியா சார்ந்த முக்கிய புள்ளிகளின் துணையோடு இறக்கியவர் ஓட்டுக்கு முன்னூறு என்ற லெவலிலும் கவனிப்பு.
இதனால் அ.தி.மு.க. அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகளில் பண்ணையார் சார்ந்த பிரிவு சார்ந்தவர்களின் மறைமுகமான ஆதரவும் கிடைத்திருக்கிறது. இந்த திரை மறைவு காய் நகர்த்தலில் நெல்லை தி.மு.க. புள்ளிகளும் அடங்கியது பற்றிய தகவல்களுடன் நெல்லை ஜங்ஷன் பகுதியின் தி.மு.க. நிர்வாகியான கடவுள் பெயரைக் கொண்ட அவர், பண்ணையாருக்காக பகிரங்கமாக வேலை பார்த்தது பொறுப்பு அமைச்சருக்குத் (தங்கம் தென்னரசு) தெரிந்தும் கூட அவர் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை போன்ற தொகுதியில் நடக்கிற அனைத்தும் புகாராகக் கட்சித் தலைமைக்குப் போயிருக்கிறது. அத்துடன் நெல்லை தொகுதியில் பா.ஜ.க.வின் நயினார் நாகேந்திரன் வெற்றி பெறுவார் என்ற பிம்பம் உருவானது. இதையடுத்தே அலர்ட் ஆன தி.மு.க.வின் தலைமை, நெல்லை தொகுதியில் தி.மு.க.வின் கூட்டணியான காங்கிரஸ் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்பதற்காக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் தொகுதி பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு தேர்தல் பணிகள் வேகமெடுத்துள்ளன. இறுதிக் கால கட்டமான வாக்குப் பதிவு நாளின் போது கூட பாளை, அதற்குட்பட்ட மேலப்பாளையம் பகுதிகளின் வாக்குச் சாவடிகளில் காலை முதலே தி.மு.க.வின் பொறுப்பாளர்களின் தலை காணாமல் போனதை வாய்ப்பாக்கிக் கொண்ட பண்ணையார் தரப்பினர் ஓட்டுக்கான பட்டுவாடாவை தடையின்றி சரசரவென முடித்திருக்கின்றனர்.
இதனால் நெல்லையில் பா.ஜ.க. கரையேறும் என்ற பேச்சுக்கள் கனமாக அடிபட்டது. எதிர்பார்ப்புகள் பல்சை எகிற வைத்தன. தி.மு.க.வின் தலைமையைக் கூட யோசிக்கவைத்தது. இப்படியான பா.ஜ.க. பண்ணையாரின் ஜெகஜ்ஜால வித்தை காரணமாகவே திருநெல்வேலி தொகுதி யாருக்கு என்ற தவிப்பிற்கிடையே அம்பையின் ஒரு பகுதி, நாங்குநேரி, ராதாபுரம், ஆலங்குளம் உள்ளிட்ட தொகுதிகள் முழு அளவில் கை கொடுக்க தி.மு.க.வின் கூட்டணியான காங்கிரசின் ராபர்ட்புரூஸ் 5,02,296 வாக்குகள் வெற்றிபெற்றிருக்கிறார். 3,36,676 என எதிர்பார்க்காத அளவுக்கு வாக்குகளைப் பெற்ற பா.ஜ.க.வின் நயினார் நாகேந்திரனோ, நெல்லை சட்டமன்ற தொகுதியில் எங்களுக்கு சற்று கூடுதலாக வாக்குகள் கிடைத்துள்ள போதிலும் பாளை சட்டமன்ற தொகுதியில் நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமான வாக்குகள் எங்களுக்கு கிடைத்துள்ளன என்று தெம்பாகவே சொல்லிவிட்டுக் கிளம்பியிருக்கிறார்.
இப்படி தவிப்பிற்கிடையே நெல்லை பாராளுமன்றத்தை தி.மு.க. கூட்டணி கைப்பற்றினாலும் இதே தவிப்பும், படபடப்பும் வரும் சட்டமன்றத் தேர்தலிலும் தொடரக் கூடாது. அதற்குள்ளாக தலைமை, மாநகர கட்சியில் கழித்தல் கூட்டல் நடவடிக்கைகளை மேற்கொண்டு தயார்படுத்த வேண்டும், என வேதனையும் கொதிப்புமாய் வெளிப்படுத்துகிறார்கள் தி.மு.க.வினர்.