நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில், அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தாலும், கூட்டணிக் கட்சிகளின் தயவால் பா.ஜ.க கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியை அமைத்தது.
ஆட்சி அமைக்க தனிப்பெரும்பான்மை இல்லாத பா.ஜ.கவுக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடுவும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நிதிஷ்குமாரும் ஆதரவு தருவதாக உறுதி அளித்தனர். அதன்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளார்.
இருப்பினும், பா.ஜ.கவின் கோட்டையாக இருக்கக்கூடிய உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களின் கூட காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. அந்த வகையில், மொத்தம் 48 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி 30 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. பா.ஜ.க 9 இடங்களைக் கைப்பற்றியிருந்தது. பா.ஜ.க கூட்டணியில் உள்ள சிவசேனா 7 இடங்களிலும், அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 1 இடங்களிலும் வெற்றி பெற்று இருந்தது. அதனால், மகாராஷ்டிராவில் பா.ஜ.கவிற்கு ஏற்பட்ட தோல்வியால் மகாராஷ்டிரா துணை முதல்வராக உள்ள பா.ஜ.கவின் மூத்த தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ், தனது துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார் எனத் தகவல் வெளியானது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், பா.ஜ.க கூட்டணியில் உள்ள சிவசேனா கட்சியின் தலைவரும், மகாராஷ்டிரா முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே பா.ஜ.க மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “பொய்யான கதைகள் கட்டமைக்கப்பட்டதால் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது சில இடங்களில் தோல்வியை சந்தித்தோம். மகாராஷ்டிராவில் நாங்கள் தோல்வியை சந்தித்தோம். எதிர்க்கட்சிகள் அரசியல் சாசனம் மாற்றப்படும், இடஒதுக்கீடு நீக்கப்படும் என்று பொய்யான கதையை கூறினர். ஆனால் உண்மையில் அப்படி எதுவும் நடக்கப் போவதில்லை. 400 இடங்களை வெல்வோம் என்ற முழக்கம் மக்களிடையே தவறான எண்ணங்களை உருவாக்கியுள்ளது. மேலும், அந்த முழக்கம் எதிர்காலத்தில் பிரச்சனைகளை உருவாக்கும் என்ற அச்சத்தை மக்கள் மனதில் எழுப்பியுள்ளது” என்று கூறினார்.
மக்களவைத் தேர்தல் பரப்புரையின் போது, பா.ஜ.க அதிக பெரும்பான்மையுடன் 400 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்றும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவார்கள் என்றும் பா.ஜ.கவினர் கூறி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.