நெல்லையில் சாதி மறுப்பு திருமணம் செய்துவைத்த கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தைப் பெண் வீட்டார் அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாநகர் பகுதியில் உள்ள ரெட்டியார்பட்டியில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பாளையங்கோட்டைப் பகுதியில் வசிக்கும் இருவேறு சமூகங்களைச் சேர்ந்த ஆண், பெண் இருவர் சாதி மறுப்பு திருமணம் செய்துகொள்ள வேண்டி இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்குள் தஞ்சம் அடைந்தனர். இந்நிலையில் நேற்று அங்கிருந்த கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் இருவருக்கும் சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்தனர் என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் பெண்ணை பல இடங்களில் தேடிவந்த பெண் வீட்டார் பெண் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் இருப்பது தெரிந்து அங்கு வந்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு கார்களில் வந்த 30க்கும் மேற்பட்டோர் பெண்ணை அழைத்துச் செல்ல வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பெண்ணை அனுப்ப அங்குள்ள நிர்வாகிகள் அனுமதி மறுத்த நிலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள் கதவுகளை உடைத்து அத்துமீறி அலுவலகத்திற்குள் நுழைந்து அங்குள்ள பொருட்கள், இருக்கை உள்ளிட்டவையை அடித்துச் சேதப்படுத்தினர். இந்தச் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.