சில ஆண்டுகளாக பெரிய ஹிட் படங்கள் எதுவும் கொடுக்காத விஜய் சேதுபதி அதை மீட்டெடுக்க போராடி வருகிறார். படத்தில் விஜய் சேதுபதி இருந்தால் அந்தப் படம் வெற்றியும், அதுவே அது விஜய் சேதுபதி படம் என்றால் படம் தோல்வி அடைவதுமாய் ஒரு ட்ரெண்ட் வலம் வந்து கொண்டிருந்தது. இந்த வேளையில் சறுக்கல்களில் இருந்து மீண்டு எழுந்து மீண்டும் வெற்றி பாதைக்குத் திரும்ப கோதாவில் மகாராஜாவாக குதித்திருக்கும் விஜய் சேதுபதிக்கு இந்த மஹாராஜா திரைப்படம் மகுடம் சூட்டியதா, இல்லையா?
காதில் அடிபட்டு கை கால்களில் வெட்டு காயங்களுடன் போலீஸ் நிலையத்திற்கு வரும் விஜய் சேதுபதி தன் வீட்டில் இருந்த லட்சுமியை காணவில்லை என போலீசில் கம்பளைண்ட் கொடுக்கிறார். போலீசோ லட்சுமி என்றால் யார் என்ன என்று கேட்க அதற்குப் பல விதங்களில் மழுப்பும் விஜய் சேதுபதி ஒரு வழியாக லட்சுமி யார் என்ற உண்மையை சொல்ல போலீஸோ இதற்கெல்லாம் கேஸ் கொடுக்க முடியாது எனத் தட்டிக் கழிக்கின்றனர். எப்படியாவது போலீசை இந்த வழக்கை விசாரிக்க செய்ய அவர்களுக்கு 7 லட்சம் ரூபாய் லஞ்சம் தருவதாக விஜய் சேதுபதி சொல்ல போலீசும் பணத்திற்கு ஆசைப்பட்டு இந்தக் கேசை கையில் எடுக்கிறது. யார் அந்த லட்சுமி..? விஜய் சேதுபதி ஏன் அந்த லட்சுமியை லஞ்சம் கொடுத்தாவது மீட்க வேண்டும் எனத் துடிக்கிறார்? உண்மையில் விஜய் சேதுபதிக்கு என்னவாயிற்று? அவரது காயங்களுக்கு யார் காரணம்? போன்ற கேள்விகளுக்கு விடையாக வந்திருக்கிறார் இந்த மகாராஜா.
சமீப காலங்களாக விஜய் சேதுபதிக்கு போதுமான வெற்றி கிடைக்காத இந்தச் சூழலில் தன்னுடைய பிளஸ் எதுவோ அதைப் பிரதானமாக வைத்துக் கொண்டு அதே சமயம் கதைக்கும் திரைக்கதைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையான படத்தைக் கொடுத்து மீண்டும் கம்பேக் கொடுத்து வெற்றி அணையில் ஏறி இருக்கிறார் விஜய் சேதுபதி. நாம் ஏற்கெனவே பார்த்து பழகிய ஒரு சமூகத்துக்கு தேவையான ஒரு கதையை எடுத்துக் கொண்டு அதனைத் தனது சிறப்பான நான் லீனியர் திரைக்கதை மூலம் மிக சுவாரஸ்யமான படமாக கொடுத்து சூப்பர் ஹிட் படமாக இப்படத்தை கொடுத்து கைதட்டல் பெற்றிருக்கிறார் இயக்குநர் நிதிலன் சாமிநாதன். முதல் பாதி முழுவதும் மர்மமான முறையில் கதையை நகர்த்தி நக்கலும் நையாண்டியமாக சிரிக்க வைக்கும்படி பிளாக் காமெடி உடன் கதை நகர்ந்து இரண்டாம் பாதியில் நாம் எதற்கெல்லாம் சிரித்து ஏளனமாக இருந்தோமோ அதை எல்லாம் மிக சிறப்பான திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையோடு ஒவ்வொரு முடிச்சுகளாக அவிழ்க்கும் பொழுது மிக மிக சீரியசான ஒரு நல்ல க்ரைம் த்ரில்லர் படம் பார்த்த அனுபவத்தை இந்த மகாராஜா கொடுத்திருக்கிறது. குறிப்பாக இரண்டாம் பாதி நாம் எதிர்பாராத பல்வேறு ட்விஸ்டுகளை உள்ளடக்கி காட்சிக்கு காட்சி ஆச்சரியங்களையும் சுவாரசியத்தையும் கூட்டி முடிவில் நெகிழ்ச்சியான திரில்லர் படமாக படம் நிறைவடைந்து தியேட்டரில் கைத்தட்டல்களை பெற்றிருக்கிறது. விஜய் சேதுபதி கரியரிலேயே இது ஒரு சிறந்த படமாக அமைந்திருக்கிறது. இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க கவனிக்க கூடிய ஒரு படமாகவும் இப்படம் அமைந்திருக்கிறது. இருந்தும் படத்தில் ஆங்காங்கே பல்வேறு விதமான லாஜிக் மிஸ்டேக்குகள் பல இடங்களில் படர்ந்து காணப்பட்டாலும் அவை பெருமளவு அயற்சி ஏற்படாதவாறு இருப்பது படத்தைப் பெரிதாகப் பாதிக்கவில்லை. இருந்தும் அந்தச் சிறு சிறு குறைகளில் சற்று கவனம் செலுத்தி இருக்கலாம்.
விஜய் சேதுபதி வழக்கம் போல் தன்னுடைய டிரேட் மார்க் நடிப்பின் மூலம் இப்படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார். தனக்கு என்ன வருமோ அந்த நடிப்பை இந்தப் படத்தில் மிகச் சிறப்பாக கையாண்டு அதற்கு ஏற்றவாறு கதையும், திரைக்கதையும், அதற்கு உதவி செய்து படத்தையும் வேறு ஒரு தளத்திற்கு கொண்டு செல்ல உதவி இருக்கிறது. இவருக்கும் போலீசுக்குமான கெமிஸ்ட்ரி சிறப்பாக அமைந்தது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. படத்தில் விஜய் சேதுபதி மட்டுமல்லாது உடன் நடித்த மற்ற நடிகர்களும் மிகச் சிறப்பாக நடித்து படத்தை வெற்றி படமாக மாற்ற உதவி செய்துள்ளனர். நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அனுராக் காஷ்யப் வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார். ஆரம்பத்தில் பயமுறுத்தி இறுதிக் காட்சிகளில் நெகிழவும் செய்திருக்கிறார். போலீசாக நடித்திருக்கும் நட்டி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவருடைய வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் நட்டி, அந்தக் கதாபாத்திரத்துக்கு எந்த அளவு நியாயம் செய்ய முடியுமோ அதைச் செய்து ரசிக்க வைத்திருக்கிறார். இவருக்கு பக்கபலமாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சினிமாவில் தலை காட்டி இருக்கும் பாய்ஸ் மணிகண்டன் ஒரு நல்ல தேர்வு. சில காட்சிகளே வந்தாலும் கவனம் பெற்றுள்ளார். இதுவரை எந்தப் படத்திலும் ஏற்காத ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் சிங்கம் புலி, அதைச் சிறப்பாக செய்து இறுதி கட்ட காட்சிகளில் பார்ப்பவர்களுக்கு வெறுப்பை கொடுக்கும் படியான கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்று இருக்கிறார். நாயகி மம்தா மோகன்தாஸ், அபிராமி மற்றும் திவ்யபாரதி ஆகியோர் சில காட்சிகளே வந்தாலும் அவரவர் வேலையை சிறப்பாக செய்து படத்திற்கு வலு சேர்த்து இருக்கின்றனர். விஜய் சேதுபதியின் மகளாக நடித்திருக்கும் சிறுமி சிறப்பாக நடித்து கவனம் பெற்று இருக்கிறார். சிறப்பு தோற்றத்தில் வரும் பாரதிராஜா அனுபவ நடிப்பால் கவர்கிறார். மற்றபடி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அனைவருமே அவரவர் வேலைகளை மிக மிக சிறப்பாக செய்து படத்தை கரை சேர்க்க பெருமளவு பங்களிப்பு கொடுத்துள்ளனர்.
படத்தில் பாடல்கள் இல்லை. ஆனால், பின்னணி இசையைத் தனக்குக் கொடுத்த ஸ்பேஸை சிறப்பாக பயன்படுத்தி மிரட்டலாக கொடுத்திருக்கிறார் அஜனீஸ் லோகநாத். எந்தெந்த காட்சிகளுக்கு எவ்வளவு சத்தம் தேவையோ ஒரு திரில்லர் படத்துக்கான இசையை சிறப்பாக கொடுத்து கவனம் பெற்று இருக்கிறார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவில் முதல் பாதியைக் காட்டிலும் இரண்டாம் பாதி காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவரின் நேர்த்தியான ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் சேதுபதி ரசிகர்களுக்கும் மற்றும் பொது ரசிகர்களுக்கும் திருப்திகரமான படமாக இந்த மகாராஜா மாறி இருக்கிறது. சமூகத்துக்கு தேவையான கதையைக் கையில் எடுத்து நான் லீனியர் முறையில் திரைக்கதை அமைத்து ஹாலிவுட் படத்திற்கு நிகரான படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் நிதிலன் சாமிநாதன். மேலும், ஒரு நல்ல த்ரில்லர் படம் பார்த்த அனுபவத்தை கொடுத்து அனைத்து ரசிகர்களுக்கும் நிறைவான படமாக அமைந்திருக்கிறது. நாயகர்களை காட்டிலும் கன்டென்ட் தான் முக்கியம் என்பதை மீண்டும் ஒருமுறை இப்படம் நிரூபித்திருக்கிறது.
மகாராஜா - மதிப்பு மிக்க ராஜா!