தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை சமீபத்தில் தமிழகத்தில் விரைவில் காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். ஏனென்றால் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் திமுகதான் தமிழகத்தை ஆட்சி செய்துவரும் நிலையில் செல்வபெருந்தைகையின் கருத்து காங்கிரஸ் கட்சியினரையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
ஆனால், காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியும், ஈரோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், “மீண்டும் காமராஜர் ஆட்சி வேண்டும் என்கின்றனர்.பாசிசத்திற்கு எதிராக,சமூக நீதியைச் சமத்துவத்தை பிரகனப்படுத்தி எங்கெல்லாம் ஆட்சி நடக்கிறதோ அது எல்லாமே காமராஜர் ஆட்சி தான்.அந்த வகையில் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்துள்ள திராவிட மாடல் ஆட்சியைக் காமராஜர் ஆட்சி எனச் சொல்வதில் எனக்குச் சிறிதும் தயக்கம் கிடையாது” என்றார். செல்வபெருந்தையில் கருத்திற்கு இது பதிலடியாகவே பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் என பல முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் கட்சியினர் மத்தியில் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, “நாம் பிறரைச் சார்ந்திருக்கப் போகிறோமா? அல்லது சுயமாக இருக்கப் போகிறோமா? எவ்வளவு காலம் பிறரை சார்ந்திருக்க முடியும். காங்கிரஸ் பேரியக்கத்திற்கு என்று ஒரு வரலாறு இருக்கிறது. நமக்குத்தான் அனைவரையும் ஆதரிக்கின்ற, குரல்கொடுக்கின்ற சித்தாந்தம் இருக்கிறது. வேறு எந்தக் கட்சிக்கும் கிடையாது. பாஜகவில் இதுவரை ஏன் ஒரு இஸ்லாமியர்களோ, கிறிஸ்துவர்களோ அமைச்சராக்க முடியவில்லை? இந்தத் தேர்தலில் காங்கிரஸ் 99 வேட்பாளர்களை வென்றிருந்தார்கள். மேலும் சுயட்ஜயாக போட்டியிட்ட இரண்டு பேர் காங்கிரஸ் கட்சிக்கு வந்திருக்கிறார்கள் தற்போது நமது கணக்கு 101 ஆக மாறியுள்ளது.
தற்போது மத்திய அமைச்சராக இருக்கக்கூடியவர்களே காங்கிரஸ் கட்சிக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. நம்மை விட்டி பிரிந்து சென்றவர்கள் எல்லாம் ராகுலில் கரங்களை வழிப்படுத்தக் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து தங்களை அர்பணித்துக் கொண்டிருக்கிறார்கள். வரலாறு மாறுகிறது. அதனால் தொண்டர்களுக்கும் தலைவர்களுக்கும் நாம் சொல்லுகின்ற ஒரு செய்தி, எந்த திசையை நோக்கிச் சொல்லப்போகிறோம்? சார்ந்து இருக்கப் போகிறோமா? தோழமை என்பது வேறு. தோழமைக்கு உண்மையாக இருப்பதில் நமக்கு நிகரானவர்கள் வேறு யாரும் கிடையாது. உண்மை என்றால் காங்கிரஸ் உண்மையாக இருக்கும் தோழமை என்றால் உண்மையான தோழமையாகக் காங்கிரஸ் இருக்கும். ஆனால் எவ்வளவு காலம் சார்ந்திருக்கப் போகிறோம்? என்ற கேள்வி தற்போது எழுகிறது. அதற்கான விடை உங்களிடம் எதிர்பார்க்கிறேன்” என்றார்.
இதனைத் தொடர்ந்து பேசிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், “இன்றைக்குத் தமிழகத்தில் 40க்கு 40 தொகுதி வெற்றிபெற்றிருக்கிறோம் என்று சொன்னால் அதற்கு, திமுகவும், முதல்வர் ஸ்டாலின்தான் காரணம் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது. தனித்து நின்றோம். கன்னியாகுமரி, சிவகங்கை தொகுதிகளில் மட்டும் ஒரு லட்சம் வாக்குகள் வாங்கி தோல்வி அடைந்தோம்; மற்ற அனைத்து தொகுதிகளிலும் டெப்பாசிட்டை இழந்தோம். யாருக்கு இங்கே ஆசையில்லை. நாம் வரவேண்டும் என்பதில் எனக்கு ஆசையில்லாமலா இருக்கிறது. நாம் வரவேண்டும் என்ற ஆசை ஒரு பக்கம் இருந்தாலும் கூட, நம் எதிரியை வீழ்த்த வேண்டும் என்பதுதான் தற்போது முக்கியம். எனவே அதற்கான பாதையை தேர்ந்தெடுத்துப் போக வேண்டுமே தவிர, நான் தான் வெல்லுவேன், நான் தான் தனியாக நிற்பேன், தனியாக தோற்பேன் என்றால் அது உங்களில் இஷ்டம். நான் யாருக்கும் பகைவன் அல்ல; உங்களுக்கு இருக்கிற அதே காங்கிரஸ் உணர்ச்சி எனக்குள்ளும் உண்டு.
தமிழகத்தில் காங்கிரஸை காலூன்ற வைத்த பெரியாரின் குடும்பத்திலிருந்து வந்திருக்கின்றேன். காமராஜரின் ஆட்சி அமைக்க வேண்டும் என்று சொல்வதில் எனக்கும் உடன்பாடு உள்ளது. ஆனால், அதற்குக் கொஞ்சம் தந்திரம் வேண்டாமா? முதலில் எதிரியை ஒழிக்காமல் எப்படி அந்த இடத்தை பிடிப்பீர்கள் என்று யோசியுங்கள். நாற்காலி காலியானதானே நீங்கள் அதில் போய் உட்கார முடியும். இந்த கட்சிக்காகத் தியாகம் செய்த ராஜீவ்காந்தி, இந்திரா காந்தியை நினைத்து பாருங்கள் தற்போது தியாகம் செய்துகொண்டிருக்கும் சோனியா காந்தியை நினைத்துப் பார்க்க வேண்டும். அவர்கள் தியாக செய்வார்கள் நாம் பதிவுபெற வேண்டும் என்று நினைத்தால் அது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் என்று எண்ணிப்பாருங்கள். இந்த மேடையில் இருக்கும் அனைவரும் வெற்றிபெற்றிருக்கிறார்கள் என்றால் அதற்கு திமுகதான் காரணம். ஆசை இருக்க வேண்டும்; இல்லை என்று சொல்லவில்லை. அது பேராசையாகி கடைசியில் ஒன்றுமில்லாமல் போய்விடக்கூடாது” என்று தெரிவித்தார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் ஒன்று சொல்ல, அதற்கு நேர் மாறாகக் காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஒன்று சொல்வது இருவருக்கும் இடையே வார்த்தை போராக மாறியிருக்கிறது. இது காங்கிரஸ் கட்சி இடையே மட்டுமல்ல திமுக - காங்கிரஸ் கூட்டணிகளிடையேயும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.