திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க இருக்கும் சூழலில் தற்போது இடைத்தேர்தலுக்கான தேர்தல் தேதி வெளியிடப்பட்டது. இது தொடர்பான தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பில், 'ஜூன் 14ஆம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கும் எனவும், ஜூன் 21 வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும். தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து அரசியல் கட்சிகள் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஆலோசனைகள் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக திமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை அறிவித்துள்ளது. இந்நிலையில் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் மனு ஒன்றை அளித்துள்ளார். அதிமுகவின் சி.வி சண்முகம் எழுதியுள்ள கடிதத்தில், சட்டவிரோதமாக ஈவிஎம் இயந்திரங்களை விழுப்புரத்தில் இருந்து திருக்கோவிலூருக்கு மாற்றி உள்ளனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் விழுப்புரத்திலேயே வைக்கப்பட வேண்டும்' எனக் கோரிக்கை வைத்து இந்தக் கடிதத்தை எழுதியுள்ளார்.