2011 ஆம் ஆண்டு இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தபோது நடைபெற்ற சம்பவங்கள் குறித்து அண்மையில் பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார் கேரி கிர்ஸ்டன்.
உலகக்கோப்பை வென்ற இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த கேரி கிர்ஸ்டன் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், தோனி குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நான் சந்தித்ததிலேயே மிகவும் சிறந்த மனிதர் தோனி, அவர் ஒரு சிறந்த தலைவர். 2011 ல் நடந்த ஒரு சம்பவம் என்னால் மறக்கமுடியாதது. 2011 உலகக்கோப்பைக்கு முன், நாங்கள் அணியாக பெங்களூருவில் உள்ள ஃபிளைட் ஸ்கூலுக்கு செல்ல வேண்டியிருந்தது. அந்த நிகழ்ச்சிக்காக நாங்கள் அனைவரும் தயாராக இருந்தோம், ஆனால், அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் என்னையும், பேடி அப்டன், எரிக் சிம்மன்ஸ் ஆகியோரையும் வெளிநாட்டினர் எனக்கூறி பாதுகாப்பு விஷயங்களை காரணம் காட்டி அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதனைப்பார்த்த தோனி, அந்த நிகழ்ச்சியையே ரத்து செய்துவிட்டார். இவர்கள் என் அணியினர், இவர்கள் அனுமதிக்கப்படவில்லை எனில் யாரும் போக வேண்டியதில்லை என்று தோனி கூறினார், அதுதான் தோனி" என நெகிழ்வுடன் தெரிவித்துள்ளார்.