200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஹிமாதாஸ் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான காரணத்தை முகநூல் பக்கத்தின் வாயிலாக அவர் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனிஷியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ஓட்டப்பந்தயப் பிரிவில் ஹிமாதாஸ் கலந்துகொண்டுள்ளார். ஏற்கெனவே, 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அவர் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார். இந்நிலையில், 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் போது அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். ஓட்டத்தைத் தவறுதலாக தொடங்கிய குற்றத்திற்காக அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக நடுவர்கள் அறிவித்தனர். ஒருவேளை அவர் போட்டியில் கலந்து கொண்டிருந்தால், இந்தியாவிற்கு நிச்சயம் ஒரு பதக்கம் கிடைத்திருக்கும் என பலரும் ஆதங்கம் தெரிவித்தனர்.
இந்நிலையில், இதற்கான காரணத்தை ஹிமாதாஸ் முகநூல் வாயிலாக தெரிவித்துள்ளார். வீடியோவில் தோன்றும் ஹிமாதாஸ், “போட்டிக்காக வாங்கப்பட்ட சிறுநீர் மாதிரியில், என்மீது ஊக்கமருந்து உட்கொண்ட புகார் எழும் என அசாமைச் சேர்ந்த இருவர் கூறினர். நான் தவறு செய்யவில்லை என்றாலும், இந்தக் கருத்து என் மனதை உலுக்கியது. களத்திற்கு மன அழுத்தத்துடன் வந்ததால் என்னால் சரியாக தொடங்க முடியவில்லை. இதுபோன்ற கருத்துகளை தயவுசெய்து பரப்பாதீர்கள். சர்ச்சையைக் கிளப்புவது என்பது எதிர்காலத்தில் என்னைப்போல விளையாட வருவபர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திவிடும்” என கோபமும், ஆதங்கமும் கலந்த குரலில் அவர் பேசியுள்ளார். இருப்பினும், அந்த இருவர் யார் என்ற தகவலை ஹிமாதாஸ் வெளியிடவில்லை.
இதுகுறித்து பேசும் ஹிமாதாஸின் பயிற்சியாளர் நிப்பான் தாஸ், “இந்த விவகாரத்தால் ஹிமாதாஸ் உடைந்து போயிருக்கிறார். அவருக்கு ஆதரவாக நேர்மறையான கருத்துகளைக் கூறி, அவரைத் தேற்றவேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.