Skip to main content

ஏஞ்சலோ மேத்யூஸுக்கு நெருக்கடி தரும் இலங்கை கிரிக்கெட்!

Published on 27/09/2018 | Edited on 27/09/2018
mathews

 

 

 

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணியின் தரம், சமீபகாலமாக தாறுமாறாக குறைந்து வருகிறது. ஆசியக் கோப்பைத் தொடரின் லீக் சுற்றிலேயே வெளியேறி அதை உறுதியும் செய்தது இலங்கை கிரிக்கெட் அணி.
 

இது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், அந்த அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஏஞ்சலோ மேத்யூஸ் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக டெஸ்ட் கேப்டன் தினேஷ் சண்டிமால் நியமிக்கப்பட்டார். இதையடுத்து, என் மீது நம்பிக்கை இல்லையென்றால் நான் விலகிக் கொள்கிறேன் என பகிரங்கமாக தெரிவித்தார் ஏஞ்சலோ மேத்யூஸ். கேப்டன் பதவி பறிக்கப்பட்ட ஆதங்கத்தில் அவர் இவ்வாறு பேசுகிறார் என சொல்லப்பட்டது. 
 

 

 

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் ஒருநாள் போட்டிகளில் விளையாடும் இலங்கை வீரர்களின் பெயர்ப்பட்டியலில் இருந்து, ஏஞ்சலோ மேத்யூஸ் பெயர் நீக்கப்பட்டுள்ளது. ஐந்து ஒருநாள் போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடர், வருகிற அக் 10-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த அதிரடி நீக்கம் குறித்து விளக்கமளித்துள்ள இலங்கை கிரிக்கெட் வாரியம்... “மேத்யூஸ் விக்கெட்டுகளுக்கு நடுவில் வேகமாக ஓடுவதில்லை. இதனால், பலமுறை ரன்-அவுட் ஆகி வெளியேறுகிறார். அதன் காரணமாகவே அவரை நீக்கி இருக்கிறோம். உடற்தகுதி தேர்வில் கலந்துகொண்டு நிரூபித்தால் மீண்டும் சேர்த்துக் கொள்கிறோம்” என தெரிவித்துள்ளது. இது மேத்யூஸ் மீதான நெருக்கடி என்ற விமர்சிக்கப்படுகிறது.