கரோனா பாதிப்பின் மையமாக மாறும் நிலையில் அமெரிக்கா உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏழை நாடுகள், வளர்ந்த நாடுகள் என வேறுபாடின்றி அனைத்து நாடுகளையும் புரட்டிப்போட்டுள்ளது இந்த வைரஸ்.
இந்தச் சூழலில் கரோனா பாதிப்பின் மையமாக மாறும் நிலையில் அமெரிக்கா உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகளவில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தைத் தாண்டியுள்ள சூழலில் அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 13,347 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அந்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68,203 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் அமெரிக்காவில் 1,027 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் வேகமாகப் பரவும் கரோனாவால் ஒரே நாளில் சுமார் 247 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து கவலை தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, "கடந்த 24 மணிநேரத்தில் உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 40 சதவீதம் பேர் அமெரிக்காவில் இருந்து மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் கரோனா பாதிப்பு மிக அதிகமாக அதிகரித்து வருகிறது. இதனால் கரோனா பாதிப்பின் மையமாக மாறும் நிலைக்கு அமெரிக்கா மாறியுள்ளது. இருப்பினும் நுணுக்கமான, விரிவான பரிசோதனைகள், தீவிரமான தனிமைப்படுத்தல், பாதிக்கப்பட்டோரின் தொடர்புகளைக் கண்டுபிடித்தல் ஆகியவையும் அமெரிக்காவில் துரிதமாக நடைபெறுவது சற்று மகிழ்ச்சியளிக்கிறது" எனத் தெரிவித்துள்ளது.