உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28 லட்சம் ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தென்கொரியாவில் பிறந்து 28 நாட்களே ஆன குழந்தைக்கு கரோனா உறுதியாகிய நிலையில் எந்தவித சிகிச்சைகளும் இல்லாமல் தாய்ப்பாலின் மூலமே கரோனாவிலிருந்து குழந்தை குணம் அடைந்துள்ள சம்பவம் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்கொரியாவில் பிறந்து 28 நாட்களான பெண் குழந்தைக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. உடனடியாக அந்தக் குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் கரோனா பாதிக்கப்பட்ட அந்தக் குழந்தைக்கு எந்த வகையிலான சிகிச்சைகள் அளிப்பது என்பது தொடர்பாக மருத்துவர்கள் ஆலோசித்து வந்தனர். உலகம் முழுவதும் பரவி பல லட்சக்கணக்கானோர் இறந்துள்ள நிலையில் கரோனாவிற்கென குறிப்பிட்ட மருந்துகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. கரோனா தாக்கும் போது ஏற்படும் உடல் குறைபாடுகளுக்கு ஏற்றவாறு மருந்துகள் வழங்கப்பட்டுதான் குணப்படுத்தப்பட்டு வருகிறது. கரோனாவிற்கென தனி மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில் மூன்று வாரங்களுக்குத் தொடர்ந்து அந்தக் குழந்தைக்குத் தாய்ப்பால் மட்டுமே கொடுக்கப்பட்டது.
மூன்று வாரங்கள் கழித்து அந்த குழந்தைக்கு கரோனா இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது. இதனால் கரோனாவிற்குத் தாய்ப்பால் மருந்தாக இருக்க முடியுமா என்ற கேள்வி எழுந்த நிலையில், மருத்துவர்கள் இதை மறுத்து உள்ளனர். இது பெரியவர்களுக்கு உகந்தது அல்ல, பிறந்த குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி என்பது வேறு விதமானது அதன் காரணமாகவே கரோனாவிலிருந்து குழந்தை குணமடைந்தாக மருத்துவர்கள் தரப்பு விளக்கம் தெரிவித்துள்ளது.