அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உருவாக்கியுள்ள பொருளாதார புத்தாக்க மீட்டெழுச்சி குழுவில் சுந்தர் பிச்சை, சத்ய நாதெல்லா உட்பட ஆறு இந்தியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
உலகம் முழுவதும் வேகமாகப் பரவிவரும் கரோனா வைரஸால் இதுவரை 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 1.34 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 5.1 லட்சம் பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு குணமாகியுள்ளார். தீவிரமாகப் பரவிவரும் கரோனா வைரஸ் காரணமாக அமெரிக்கா மோசமான பாதிப்புகளைச் சந்தித்துள்ள சூழலில், அந்நாட்டின் பொருளாதாரமும் மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளது. இந்நிலையில் வீழ்ந்த அந்நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக புதிய குழு ஒன்றை அமைத்துள்ளார் அதிபர் ட்ரம்ப்.
'மாபெரும் அமெரிக்கப் பொருளாதார புத்தாக்க மீட்டெழுச்சி தொழிற்துறை குழு' என அழைக்கப்படும் இந்தக் குழு அமெரிக்கப் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான அறிவுரைகளை அமெரிக்க அரசிற்கு வழங்க உள்ளது. இந்தக் குழுவில் சுந்தர் பிச்சை, சத்யா நாதெல்லா, ஐபிஎம் நிறுவனத்தின் அரவிந்த் கிருஷ்ணா, மைக்ரான் நிறுவனத்தின் சஞ்சய் மெஹ்ரோத்ரா, மாஸ்டர் கார்டிலிருந்து அஜய் பங்கா, ஆன் முகர்ஜி ஆகிய ஆறு இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.
மேலும், ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக், ஆரக்கிள் நிறுவனத்தின் லாரி எலிசன், பேஸ்புக்கின் மார்க் ஸுக்கர்பர்க், கேட்டர்ப்பில்லரின் ஜிம் அம்ப்லிபி, டெஸ்லாவின் எலான் மஸ்க், ஃபியட் க்ரைஸ்லரின் மைக் மேன்லி, ஃபோர்டின் பில் ஃபோர்ட் ஆகியவரும் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் குழு குறித்த அறிவிப்பின்போது பேசிய ட்ரம்ப், "இவர்கள்தான் அந்தப் பெயர்கள், இவர்கள்தான் புத்திசாலியானவர்கள், பிரகாசமானவர்கள், இவர்கள்தான் நமக்குப் புதிய யோசனைகளை வழங்கவுள்ளனர்" எனத் தெரிவித்தார். இந்தப் புதிய குழுவானது அமெரிக்கப் பொருளாதாரத்தை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வர என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அமெரிக்க அரசுக்கு அறிவுரைகள் வழங்க உள்ளது.