ரஷ்யா உக்ரைன் போர் தொடங்கி 1000 நாட்களை கடந்துள்ள நிலையில் முதல் முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மூலம் ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதலை நடத்தி இருக்கிறது.
நள்ளிரவில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என்பது தொடர்பான தகவல்கள் முழுமையாக இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் ரஷ்யாவினுடைய இந்த தாக்குதல் சர்வதேச அளவில் கவனம் பெறும் அளவுக்கு மிகப்பெரிய தாக்குதலாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 1000 கிலோமீட்டர் முதல் 3000 கிலோமீட்டர் வரையிலான தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கக்கூடிய ரஷ்யாவின் ஐசிபிஎம் என்று சொல்லக்கூடிய ஏவுகணைகளை வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஐசிபிஎம் (ICBM-Intercontinental ballistic missile) ஏவுகணை அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் வல்லமை பெற்றது. உக்ரைன் அமெரிக்கா தயாரித்து வழங்கிய ஏவுகணைகளை கொண்டு ரஷ்யாவின் மையப்பகுதியில் தாக்குதல் நடத்தி இருந்தார்கள். அந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஐசிபிஎம் ஏவுகணையை கொண்டு உக்ரனின் நிப்ரோ நகரின் மீது தாக்குதலை நடத்தி உலக அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது ரஷ்யா.
இந்த ஐசிபிஎம் ஏவுகணை தாக்குதல் உறுதிசெய்யப்பட்ட போதிலும் குறிப்பிட்ட ஏவுகணை அணு ஆயுதங்களை தாங்கி சென்றதா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.