கரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் காரணம் சீனா உண்மைகளை மறைத்து உலக நாடுகளை ஏமாற்றியதே எனக்கூறி அமெரிக்க மாகாணமான மிசவ்ரி, சீனா மீது வழக்கு தொடர்ந்துள்ளது.
சீனாவின் வுஹான் நகரில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் 25 லட்சத்திற்கும் அதிகமானோரைப் பாதித்துள்ளது, 1.7 லட்சத்திற்கு அதிகமானோரின் உயிரைப் பறித்துள்ளது. இந்த வைரஸ் தொற்றால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா, வைரஸ் பரவலுக்குச் சீனாதான் காரணம் எனத் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது. அமெரிக்காவில் ஏழு லட்சத்திற்கு அதிகமானோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 42,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கரோனா வைரஸ் பரவலுக்குக் காரணமான சீனாவிடம், உலக நாடுகள் இழப்பீடு கோர வேண்டும் எனவும், சீனாவின் ஆய்வகத்திலிருந்துதான் இந்த வைரஸ் பரவியதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டியிருந்தார். அதேபோல இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளும் சீனாவை இந்த விவகாரத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் அமெரிக்க மாகாணமான மிசவ்ரி, சீனா மீது வழக்கு தொடர்ந்துள்ளது. மிசவ்ரி கிழக்கு மாகாணத்தில் மிசவ்ரி அட்டர்னி ஜெனரல் எரிக் ஷ்மிட் தொடர்ந்துள்ள இந்த வழக்கில், தொற்றுநோயால் ஏற்பட்ட உயிரிழப்புகள், மக்களின் துன்பங்கள் மற்றும் பொருளாதாரச் சரிவு ஆகியவற்றிற்குச் சீனாவே காரணம் எனக் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஷ்மிட் கூறுகையில், "கரோனா வைரஸ் உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு ஈடுசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தியுள்ளது, இதனால் நோய், இறப்பு, பொருளாதாரச் சீர்குலைவு ஆகியவை ஏற்படுகின்றன. சீன அரசாங்கம் கரோனா வைரஸின் ஆபத்து மற்றும் தொற்று தன்மை பற்றி உலகுக்குப் பொய் சொன்னது. இதுகுறித்து மருத்துவர்களை மௌனமாக்கியது. மேலும் நோய் பரவுவதைத் தடுக்க எதுவும் செய்யவில்லை.
கவச உடைகளை, மருத்துவ கருவிகளையும் பதுக்கியது. இதனால் விரைவில் தடுக்கக் கூடிய ஒரு தொற்றைப் பெரிதாக்கி விட்டுள்ளது சீனா. அவர்களின் இந்த செயல்களுக்கு அவர்கள் பொறுப்பேற்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார். கரோனா விவகாரத்தில் பல நாடுகள் சீனா மீது அதிருப்தியிலிருந்தாலும், சீனா மீது முதன்முதலாக வழக்குத் தொடர்ந்து சட்ட ரீதியிலான அணுகுமுறையைக் கையிலெடுத்துள்ளது மிசவ்ரி.