Skip to main content

கணவன் திருடி வந்த வாகனத்தைக் காவல் நிலையத்தில் ஒப்படைத்த மனைவி!

Published on 06/11/2021 | Edited on 06/11/2021

 

police

 

புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் சமீப காலமாக நகை பணம் திருட்டு ஒருபக்கம் இருந்தாலும்  மோட்டார் சைக்கிள்கள், ஆடுகள், மின் வயர்கள் திருட்டு அதிகரித்து வருகிறது. சில இடங்களில் ஆடு திருடர்கள் பிடிபட்டாலும் கூட, திருட்டு சம்பவங்கள் குறையவில்லை. புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலத்தில் தீபாவளிக்கு முதல் நாள் 33 ஆடுகள் ஒரே நேரத்தில் திருடப்பட்டிருந்தது. இத்தனை ஆடுகளையும் ஒரே இரவில் திருடிச் சென்றது யார் என்று போலீசார் தேடி வருகின்றனர்.

 

அதேபோல கடந்த வாரம் புதுக்கோட்டையில் மோட்டார் சைக்கிள் திருடும் போது பிடிபட்ட கொத்தமங்கலம் கண்ணன் தான், திருடிய வாகனங்களை எங்கள் ஊர் மெக்கானிக் மூலம் விற்பனை செய்தேன் என்று சொல்ல மெக்கானிக்கை சிறப்புப் பிரிவு போலீசார் தூக்கிச் சென்று வீடு வீடாக சென்று 31 மோட்டார் சைக்கிள்களை மீட்டனர். இந்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் திருடன் கண்ணனை கைது செய்து சிறைக்கு அனுப்பிய போலீசார் ஏனோ கண்ணனால் திருடி வந்த மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்த கண்ணனின் கூட்டாளியான மெக்கானிக்கை காணவில்லை; தேடிவருகின்றனர்.

 

இந்த நிலையில் தான் கீரமங்கலத்தில் ஒரு பழைய மோட்டார் சைக்கிள் திருடன் நேற்று முன்தினம் போதையோடு ஒரு மோட்டார் சைக்கிளுடன் வீட்டிற்குச் சென்றபோது மோட்டார் சைக்கிள் ஏது என்று அவனது மனைவி கேட்க, பதில் இல்லை. தன் கணவனால் இனியும் அவமானப்படக் கூடாது என்பதால் கணவனால் திருடிக் கொண்டு வரப்பட்ட மோட்டார் சைக்கிளைப் பற்றி கீரமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்து மோட்டார் சைக்கிளையும் காவல் நிலையத்திலேயே ஒப்படைத்துள்ளார்.

 

கீரமங்கலம் பகுதியில் இதுவரை யாரும் மோட்டார் சைக்கிளைக் காணவில்லை என்று புகார் கொடுக்காத நிலையில் வேறு எங்கோ திருடப்பட்ட வாகனமா என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்