/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/modi-camp-bjp-rj-art_6.jpg)
இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்டமாகக் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்தது. இதனையடுத்து இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்டம், நான்காம் கட்டம், ஐந்தாம் கட்டம் மற்றும் ஆறாம் கட்டம் என வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளது. இறுதி மற்றும் 7 ஆம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
அதன்படி இன்னும் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு மட்டுமே உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே பல்வேறு ஊடகங்களுக்குப் பிரதமர் மோடி பேட்டிகளை அளித்து வருகிறார். அந்த வகையில் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடி பேசுகையில், “கடந்த 75 ஆண்டுகளில் மகாத்மா காந்தி போன்ற ஆளுமைகளை உலகுக்கு அறிமுகப்படுத்தி இருக்க வேண்டியது நம்முடைய பொறுப்பு. மகாத்மா காந்தி பற்றிய திரைப்படம் வெளியாகும் வரை அவரைப் பற்றி உலகம் அறிந்திருக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/selvaperunthagai-pm-art_0.jpg)
இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கு.செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்பே 1909 ஆண்டு - ரஷ்யாவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற நாவலாசிரியரான லியோ டால்ஸ்டாய், 1920 ஆம் ஆண்டு - வியட்நாம் புரட்சியாளர் ஹோசிமின், 1931 ஆம் ஆண்டு - அறிவியல் உலகின் அணையா விளக்கு ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், 1931 ஆம் ஆண்டு - ஹாலிவுட் திரையுலகின் பெரும் புகழ்பெற்ற கலைஞர் சார்லி சாப்லின், 1940 ஆம் ஆண்டு - நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவரும், தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவருமான நெல்சன் மண்டேலா, 1940 ஆம் ஆண்டு - ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தவரின் விடிவெள்ளியாக, நம்பிக்கை நாயகனாகத் திகழ்ந்தமார்ட்டின் லூதர் கிங், 1950 ஆம் ஆண்டு - தி லைஃப் ஆஃப் மகாத்மா காந்தி வரலாற்று படைப்பை பதிந்த அமெரிக்க பத்திரிகையாளர் லூயிஸ் பிஷ்ஷர் மற்றும் இவர்களைப் போன்ற புகழ்பெற்ற ஏராளமானவர்கள் மகாத்மா காந்தியடிகளின் வாழ்க்கையால் ஈர்க்கப்பட்டவர்கள். அவரைப் பின்பற்றியவர்கள். போற்றியவர்கள்.
ஆனால் மோடி போன்ற காந்தியின் வரலாறு அறியாதவர்கள் அவரைகுறித்து அவதூறு கருத்து சொல்வதற்குக் கடும் கண்டனங்களைத்தெரிவித்துக் கொள்கிறேன். தேசத்தந்தையின் மாண்பை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பேசிய மோடி, நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)