இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்டமாகக் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்தது. இதனையடுத்து இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்டம், நான்காம் கட்டம், ஐந்தாம் கட்டம் மற்றும் ஆறாம் கட்டம் என வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளது. இறுதி மற்றும் 7 ஆம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அதன்படி இன்னும் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு மட்டுமே உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே பல்வேறு ஊடகங்களுக்குப் பிரதமர் மோடி பேட்டிகளை அளித்து வருகிறார். அந்த வகையில் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடி பேசுகையில், “கடந்த 75 ஆண்டுகளில் மகாத்மா காந்தி போன்ற ஆளுமைகளை உலகுக்கு அறிமுகப்படுத்தி இருக்க வேண்டியது நம்முடைய பொறுப்பு. மகாத்மா காந்தி பற்றிய திரைப்படம் வெளியாகும் வரை அவரைப் பற்றி உலகம் அறிந்திருக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மகாத்மா காந்தி குறித்த பிரதமர் மோடியின் இந்தக் கருத்துக்குக் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் சமுக வலைத்தளப்பதிவில், “மகாத்மா காந்தியின் பாரம்பரியத்தை பிரதமர் மோடி அழிக்கிறார். 1982 ஆண்டுக்கு முன் மகாத்மா காந்தி அங்கீகரிக்கப்படாத உலகில் வெளியேறும் பிரதமராக மோடி வாழ்கிறார் போலும். வாரணாசி, டெல்லி, அகமதாபாத்தில் காந்திய நிறுவனங்களை அழித்தது மோடி அரசுதான். மகாத்மா காந்தியின் தேசியத்தைப் புரிந்து கொள்ளாததுதான் ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களின் அடையாளம். அவர்களின் சித்தாந்தத்தால் உருவாக்கப்பட்ட சூழல்தான் நாதுராம் கோட்சே, காந்தியைக் கொல்ல வழிவகுத்தது. 2024 மக்களவைத் தேர்தல் மகாத்மாவின் பக்தர்களுக்கும் கோட்சேவின் பக்தர்களுக்கும் இடையே நடக்கும் சண்டை. பிரதமர் மோடி மற்றும் அவரது கோட்சே பக்தர்களின் தோல்வி உறுதியாகிவிட்டது” எனக் குறிப்பிட்டுள்ளார்.