பசுபதிபாண்டியனின் முக்கிய ஆதரவாளரான பாளையங்கோட்டை வாகைகுளம் தீபக்ராஜன் பட்டப்பகல் படுகொலைச் சம்பவத்தால் பதட்டம் தணிந்தபாடில்லை. இதனை மேலும் அதிகரிக்கும் வகையில் உண்மைக் குற்றவாளிகள் கைது செய்யப்படும் வரை தீபக்ராஜனின் உடலை வாங்கப் போவதில்லை என்று ஆதரவாளர்களும் உறவினர்களும் தெளிவாகவே தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனால் தேடலைத் தீவிரப்படுத்திய மாநகர காவல்துறை கொலை தொடர்பாக நவீன், முன்னீர்பள்ளம் ஐயப்பன், ஸ்ரீவைகுண்டம் ஐயப்பன், முருகேசன், மேலநத்தம் முத்து சரவணன், வல்லநாடு தம்பான் உள்ளிட்ட ஆறுபேரைத் கைது செய்து விசாரணையை மேற்கொண்டனர்.
நவீனிடம் வேப்பன்குளத்தைச் சேர்ந்த ஒருவர் தான் தொகையினைப் பேசி திட்டத்தினைக் கொடுத்துள்ளார். அந்தக் காரியம் பற்றி நவீனுக்குத்தான் தெரியும். நவீனைத் தவிர பிடிபட்ட மற்றவர்களுக்கு தீபக் ராஜனை கொலை செய்யும் திட்டமில்லை. இந்த ஆபரேஷனில் 15 பேர்வரை ஈடுபட்டுள்ளனர். தீபக்ராஜன் ஹோட்டலை விட்டு வெளியே வரும் போது காரியத்தை முடிக்க 6 பேர் காத்திருக்கிறார்கள். அதோடு வெளியே ஆட்களோடு ஆட்களாக மூன்று பகுதிகளில் மூன்று பேர் வீதம் கண்காணிப்பிலிருந்தனர். ஒரு வேளை ஹோட்டலில் இருந்து வெளியே வரும் தீபக் 6 பேரிடமிருந்து தப்பிவிட்டால் மூன்று பகுதிகளில் கண்காணிப்பிலிருக்கும் மூன்றுபேர் கொண்ட அடுத்த வளையத்திற்குள் சிக்கிக்கொள்வார். தப்பிக்க முடியாது. கதை முடிந்துவிடும். இப்படித்தான் ஸ்கெட்ச் போட்டு வேலையை முடித்தது நவீன் குரூப் என்ற பழங்குற்றங்களை விசாரிக்கிற அந்த அதிகாரி, முழுக்க முழுக்க இது சாதிரீதியாக நடத்தப்பட்ட கொலையல்ல. பழைய கணக்கை நேர் செய்ய எதிரிக்கு எதிரி நண்பன் வகையில் இரண்டு எதிர் எதிரான துருவங்கள் இந்த ஆபரேஷனில் கைகோர்த்துள்ளன. அதற்கேற்ப இவர்களுக்கு கூலியே பிரதானம் என்பதால் கூலிப்படையாகச் செயல்பட்டுள்ளனர் என அதிர்வைக் கிளப்பினார்.
ஆந்திரா சட்டக் கல்லூரி ஒன்றில் சட்டப்படிப்பிலிருந்த முத்துமனோ வாகைக்குளம் திரும்பிய பின் பசுபதிபாண்டியனின் தீவிர ஆதரவாளராக மாறிருக்கிறார். தீபக் கொலையில் தொடர்புடைய நவீனுக்குப் பூர்வீகம் அருகிலுள்ள நாங்குநேரியிலிருக்கும் மறுகால்குறிச்சி. 22 வயதேயான இளைஞன். பசுபதி பாண்டியனின் ஆதரவாளரான முத்துமனோவிற்கு அவரது கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட பண்ணையார் தரப்பினரே டார்கெட். எனவே இந்த தரப்புகள் முத்துமனோ குரூப்பின் மீது எச்சரிக்கையாகவே இருந்திருக்கிறார்கள். இதன் ஒரு பகுதி தான் பசுபதி பாண்டியனின் முக்கிய வழிக்காட்டியாக செயல்பட்ட புல்லாவெளி சிங்காரத்தை பாளையங்கோட்டை போலீசார் திருச்செந்தூர் நீதிமன்றத்தில் 2020ல் ஆஜர்படுத்தச் சென்றபோது போலீஸ் வாகனத்தை இடைமறித்து புல்லாவெளி சிங்காரத்தை கொலை செய்ததில் பண்ணையார் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
எனவே இருதரப்பின் பகை நெருப்பு அணையாமல் தொடர்ந்து கணன்று கொண்டிருந்த தருணம். இந்தச் சூழலில் தான் 2021ல் மாவட்டத்தின் பணகுடி நகரப் பள்ளியொன்றின் எதிரெதிர் சமூகம் சார்ந்த மாணவனும், மாணவியும் காதலித்த விவகாரம் பெற்றோர் மூலம் முத்துமனோவிற்கு வர மாணவியின் தரப்பிற்காகச் செயல்பட்ட முத்துமனோ, தீபக்ராஜன் டீம் மாணவனை களக்காடு பக்கம் உள்ள சிங்கிகுளம் காட்டிற்குக் கொண்டு வந்து அவனைக் கடுமையாகத் தாக்கி எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் முத்துமனோ, தீபக்ராஜன் டீமை வளைத்த களக்காடு போலீசார் அவரை ஸ்ரீவைகுண்டம் கிளைச் சிறையில் அடைத்திருக்கின்றனர். அந்த சிறையில் உள்ள எதிர் தரப்புகள் முத்துமனோவை கொலை செய்ய முயன்றபோது, பதறிப்போன காவல்துறை முத்துமனோவின் பாதுகாப்பின் பொருட்டு அவரை பாளையங்கோட்டை சிறைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அங்கே முத்துமனோவை எதிர்தரப்புகள் படுகொலை செய்ததில் ராக்கெட் ராஜாவின் சகாக்கள் கைது செய்யப்பட்டனர். இதில் மூன்றாவது பிரிவைச் சார்ந்தவர்களும் அடக்கமாம். தென்மாவட்டத்தில் பகைமை காரணமாக ஒன்றுக் கொன்று இணையாமல் மோதிக் கொள்கிற மூன்று பிரிவுகளில் இரண்டு பிரிவினர் முத்துமனோ கொலையில் இணைந்து செயல்பட்டதுதான் அப்போது பரபரப்பு விஷயமானது. இந்தக் கூட்டணியால் பின் விளைவுகள் விபரீதமாகலாம் என்பதைக் கணக்கிட அது சமயம் உளவுப் பிரிவுகள் தவறிவிட்டன என்கிறார் அந்தப் பழங்குற்றவாளிகள் பிரிவு உளவு அதிகாரி.
தவிர முத்துமனோவிற்குப் பின் தீபக் ராஜன் அவரின் கேங்ஸ்டராக முன்னின்று வளர்ந்தது மறுகால்குறிச்சியின் நவீனுக்கு உறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு மத்தியில் கடந்த 2020 ஆண்டின் போது மறுகால்குறிச்சி கிராமத்தின் இளைஞர் ஒருவர் அங்குள்ள தன் சமூகம் சார்ந்த பெண்ணைக் காதலித்து பெண் வீட்டாரின் கடும் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்துள்ளார். பின் பாதுகாப்பிற்காக ஊரை விட்டுக் கிளம்பி நெல்லை டவுண் பகுதியில் குடியிருந்திருக்கிறார்கள்.
அதுசமயம் அங்கு வந்த மனைவியின் உறவினர்களின் குரூப் கணவனைப் படுகொலை செய்திருக்கிறது. இதனால் கிராமத்தில் பிரளயமேற்பட இரண்டு தரப்பு உறவினர்களும் மோதிக் கொண்டனர். வெடிகுண்டு மற்றும் அரிவாள் வீச்சுகளில் இரண்டு தரப்பிலும் அடுத்தடுத்து உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. நாங்குநேரியே பெரும் பரபரப்பை காணப்பட்டது. இந்தச் சம்பவத்தில் கிராமத்தின் தாட்டியமான கேங்க்கும் ஈடுபடுத்தப்பட்டது. தனிப்பட்டவர்களின் சுயநலத்திற்காக உருவாக்கப்பட்ட இந்த தாட்டியமான கேங்க்கின் பின்னணி மிரளவைக்கும் ரகம்.
நாங்குநேரிப் பகுதியிலிருக்கும் நிலச்சுவான்தார்கள் அமைப்பு ஒன்று தங்களின் பண்ணை விவகாரங்களில் ஏற்படுகிற பிரச்சனைகளை அடக்கவும் மிரட்டவும் ஒரு குறிப்பிட்ட பிரிவு சார்ந்தவர்களான மறுகால்குறிச்சி உள்ளிட்ட அண்டை கிராமங்களிலுள்ளவர்களை இணைந்து கேங்க்காக வெகுகாலமாக வைத்துக் கொள்வது நடைமுறையாகவே இருந்திருக்கிறது. அவர்களுக்கான அனைத்து சௌகரியமான செலவுகளையும் பண்ணையே கவனித்துக் கொள்ளும். வெளியே தெரியாமல் செயல்படுகிற இந்தக் கேங்க் பற்றிய நடவடிக்கைகள் காவல்துறை வரை போனாலும், கண்டு கொள்ளப்படாததோடு, நடவடிக்கையுமிருக்காதாம்.
கடந்த ஆண்டு நாங்குநேரியின் பட்டியலின சமூக மாணவன் சின்னத்துரை சக மாணவர்களால் தாக்கப்பட்ட பின்னணியில் இந்த கேங்க் செயல்பட்டது அப்போது தான் வெளியுலகத்திற்கே தெரியவந்திருக்கிறது. தமிழகமே கொதி நிலையிலிருக்க, வயது மூப்பு காரணமாக அந்த கேங்க் சற்று அடங்கி ஓடுங்கியது. அதனால் வீரியமிக்க கோஷ்டியாக அடுத்த தலைமுறையின் மறுகால்குறிச்சியின் இளைஞரான நவீன் தலைமையில் அக்கம் பக்கம் கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்களின் கோஷ்டியை உருவாக்கியிருக்கிறார் மறுகால்குறிச்சியின் மூளையாகச் செயல்படுபவரான லெப்ட் முருகன். இவரது டைரக்ஷனில் தான் நவீன் கோஷ்டி செயல்பட்டதுடன் எல்லை தாண்டி கூலிக்காக ஆளை அடிக்கிற கூலிப்படையாகவும் மாறியிருக்கிறான்.
முத்து மனோவின் எதிர்பிரிவு சார்ந்தவர் நவீன், இவர்களுக்குள் உரசல்களும் ஏற்பட்டதுண்டு. கூலிப்படையாகச் செயல்பட்டு வந்த நவீன் மீது சென்னை ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கு, கோவை, ஈரோடு, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட காவல் நிலையங்களிலும் வழக்குகள் உள்ளனவாம். முத்துமனோவிற்குப் பின்பு அவரது இடத்தில் கேங்க்ஸ்டராகச் செயல்பட்டு வந்து தீபக்ராஜா கூட நவீன் தரப்பினரிடம் மோதிக் கொண்டதும் பகை நெருப்பாகியிருக்கிறது.
இந்நிலையில் இரு வருடங்களுக்கு முன் கொலையுண்ட முத்து மனோவின் மூன்றாம் ஆண்டு நினைவு அஞ்சலி அவரது வாகைகுளம் கிராமத்தில் அனுஷ்டிக்கப்பட்டிருக்கிறது. முத்து மனோவின் கொலைக்கு நீதி வேண்டும் என்ற போஸ்டர்கள், ப்ளக்ஸ்கள் என்று கிராமத்தில் பரபரப்பாக நடத்தப்பட்டதில் தீபக் ராஜன் முன்னணியாகச் செயல்பட்டிருக்கிறார். கோஷ்டி தலைவனாக வளர்ந்தும் வந்திருக்கிறார். இதனால் ஆத்திரமான நவீன் நெல்லை மாவட்ட ரூரல் காவல் உயரதிகாரி ஒருவருக்கு மொபைல் காலில் பேசியருக்கிறார். “திருநெல்வேலி ஏரியாவிலேயே நாங்க தான் ரவுடி கேங்க்.. வேறு எவனுமில்ல....” என்று ஓங்கிய குரலில் சவாலாகப் பேசிவிட்டு தொடர்பைத் துண்டித்திருக்கிறான்.
இந்த நிகழ்வுகள் அனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்த்த மூன்றாவது எதிரி பிரிவு ஒன்று நவீன் கூலிப் படையாகச் செயல்படுபவர் என்பதால் தங்களின் எதிரியைத் தீர்த்துக் கொள்ள அவரைப் பயன்படுத்திக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. அதற்கேற்ப முத்துமனோ பாளையங்கோட்டை ஜெயிலில் கொலை செய்யப்பட்டபோது அந்தப் பிரிவைச் சார்ந்தவரும் சம்பவத்தில் இணைந்திருக்கிறார்.
தென்மாவட்டத்தில் இந்த மூன்று பிரிவுகளுக்கிடையே அவ்வப்போது உரசல்கள் வெடிப்பது இயல்பு. ஆனால் இந்தச் சம்பவத்தில் தீபக்ராஜனின் கதையை முடிக்க, எதிரிக்கு எதிரி நண்பன் என்றவகையில் இருதுருவங்களாக நின்ற அவரது இரண்டு எதிர் தரப்புகளும் ஒன்றாக இணைந்து கைகோர்த்திருக்கின்றனவாம். நவீன் அடிப்படையில் கூலிப்படையாகச் செயல்படுபவன். பணமே பிரதானம் என்பதால் தங்களுக்கான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட மூன்றாம் அணி இந்த அசைன்மெண்ட்டிற்காக 20 எல் வரை டீல் பேசி 12 எல் அட்வான்சாகக் கைமாறியுள்ளதாம். இதில் நவீனுடன் செயல்பட்டு பிடிபட்ட ஐந்து பேர்கள் மீதும், அடிதடி கொலை, கொலைமுயற்சி வழக்குகளுமிருப்பதால் கூலிக்காக நவீனுடன் கைகோர்த்திருக்கிறார்களாம்.
தீபக்ராஜன் கொலையில் தொடர்புடைய கும்பல் பலவழிகளில் தப்பிச்செல்ல, சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட லெப்ட்முருகன் காரில் அவருடன் சேர்ந்து மூன்று பேர் தப்பிச் சென்றது கூட வழியோர சி.சி.டி.வி.யில் பதிவான புட்டேஜ்களும் போலீசார் வசம் சிக்கியிருக்கிறது. எதிரிகளான இரண்டு துருவங்கள் ஒரே நேர் கோட்டிற்கு வந்திருப்பது திகிலையும் திகைப்பையும் எகிற வைத்திருக்கிறது.