இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்டமாகக் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்தது. இதனையடுத்து இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்டம், நான்காம் கட்டம், ஐந்தாம் கட்டம் மற்றும் ஆறாம் கட்டம் என வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளது. இறுதி மற்றும் 7 ஆம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அதன்படி இன்னும் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு மட்டுமே உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “தேர்தல் என்று வந்தாலே அதை நேர்மறையாகவும், நேர்கொண்டும் களமாடுகின்ற இயக்கம் அதிமுக என்பதை மீண்டும் பறைசாற்றுகின்ற விதமாக நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலை, அதிமுக அடலேறுகள் நேர்மையாகவும், நெஞ்சுரத்தோடும், கண்ணியத்தோடும் எதிர்கொண்டு முடித்திருக்கிறோம். அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளும், நன்றிகளும். நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலில் அதிமுகவிற்கு மக்கள் பெருவாரியான ஆதரவையும், வாக்குகளையும் வாரி வழங்கியிருக்கிறார்கள். நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற திமுக அரசின் மீது இருக்கிற வெறுப்பும், முதலமைச்சர் மீது இருக்கிற நம்பிக்கையின்மையும், இந்தத் தேர்தலில் பெருவாரியாக வெளிப்பட்டிருப்பதை நாம் கண்கூடாகக் கண்டிருக்கிறோம்.
எப்படித் தேர்தலை நாம் நேர்மறையாகவும், நெஞ்சுரத்தோடும் சந்திக்கப் பழக்கப்பட்டிருக்கிறோமோ, அதற்கு நேர் எதிர்மாறாக திமுக, எந்தத் தேர்தல் ஆனாலும் எப்படி புறவாசல் வழியாக ஆட்சியைப் பிடிக்கலாம் எப்படி வாக்காளர்களின் கவனங்களை திசைதிருப்பி, மடைமாற்றி அவர்களின் வாக்குகளை களவாடலாம் என்ற எண்ணத்தோடே தொடர்ந்து தேர்தலில் வாக்குகளை களவாடி புறவாசல் வழியாகவே ஆட்சிக் கட்டிலில் ஏறி பழக்கப்பட்டவர்கள், அதைத் தொடர்ந்து செய்வதற்கு உண்டான முயற்சியை இந்தத் தேர்தலிலும் எடுத்திருக்கிறார்கள்.
தேர்தல் முடிந்து வாக்கு எண்ணும் நாளுக்காக நாம் காத்திருக்கிறோம். மக்கள் நல்ல தீர்ப்பை வழங்குவதற்குத் தயாராக இருந்து அந்தத் தீர்ப்பை எதிர்நோக்கி இருக்கின்ற இந்த வேளையில், வாக்கு எண்ணும் மையங்களுக்குச் செல்லக்கூடிய முகவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகளையும், வாழ்த்துகளையும் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு 19.4.2024 அன்று முடிந்துள்ள நிலையில், 04.6.2024 அன்று வாக்கு எண்ணும் பணி நடைபெற உள்ளது. இதற்காக அதிமுக சார்பிலும், கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் முகவர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் அனைவரும் மிகுந்த கவனத்துடனும், விழிப்புடனும் பணியாற்றி வெற்றிக் கனியைச் சிந்தாமல், சிதறாமல் பெற்று அதிமுகவிற்கும், கூட்டணிக் கட்சிகளுக்கும் சமர்ப்பிக்கும் வகையில் பணியாற்றிட வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.