இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதில், 6 கட்ட தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளது. இதையடுத்து, இறுதிக்கட்டத் தேர்தல் ஜூன் 1 ஆம் தேதி அன்று நடைபெறும். ஜூன் நான்காம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நடைபெற ஒன்றிரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பிரதமர் மோடி ஏபிபி என்ற தனியார் செய்து நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் நாள் அன்று உங்கள் மனநிலை எப்படி இருக்கும் என செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், “தேர்தல் முடிவு வெளியாகும் நாளில் நான் கூடுதல் கவனமாக இருப்பேன். தேர்தலில் கிடைக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை என்ற விவரத்தில் இருந்து நான் தள்ளியே இருப்பேன்.
வாக்குகள் எண்ணும் நாளில், நான் தியானம் செய்வதை அதிகரிப்பேன். பிற தினசரி வேலைகளின் நேரத்தை அதிகரிப்பேன். வாக்கு எண்ணும் நாளில், யாரும் என் அறைக்குள் அனுமதிக்கமாட்டேன். என்னைத் தொலைப்பேசியில் தொடர்புகொள்ள யாரையும் அனுமதிக்கமாட்டேன். முடிவு நாளில், வெற்றி உறுதியாகும் வரை நான் விலகியே இருப்பேன்.
குஜராத் மாநிலத்தில் முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிடும் போது, தேர்தல் ஆணையம் என்னை மிகவும் தொந்தரவு செய்து, எனக்கு இடையூறுகளை ஏற்படுத்தி வந்தது. நான் வெற்றி பெறுவது கடினம் என்று மக்கள் என்னிடம் கூறினார்கள். கடந்த 2001 டிசம்பர் 15ஆம் தேதி அன்று குஜராத் சட்டமன்றத் தேர்தல் முடிவு வெளியானது. முதல்வர் இல்லத்தில் என் அறையில் அமர்ந்தேன். நான் எந்த அழைப்புகளையும் எடுக்கவில்லை. மதியம் 1.30 மணியளவில், வெளியே டிரம்ஸ் வாசிக்கும் சத்தம் கேட்டது. அதனால் என்ன விஷயம் என்று கேட்க ஒருவரை அழைத்தேன். கட்சித் தொண்டர்கள் என்னை வாழ்த்த விரும்புவதாகக் கடிதம் ஒன்றைக் கொண்டு வந்தார். முடிவுகளின் குறிப்பை நான் முதன்முறையாகப் பெற்றேன். நல்ல மாலையும், இனிப்புப் பெட்டியும் வாங்கி வரச் சொன்னேன். எங்கள் வெற்றியைக் கொண்டாடும் முன் கேசுபாய் படேலுக்கு முதலில் மாலை அணிவித்தேன்” என்று கூறினார்.