நாளை காலை பத்து முப்பது மணிக்கு அயோத்தி வழக்கில் பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக உச்சநீதிமன்றம் அறிவித்திருக்கும் நிலையில் உத்தரப்பிரதேசத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப் படுத்தப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கனவே 144 தடை அங்கு அமலில் உள்ளது. அயோத்தியில் மதுரா, வாரணாசியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உபியில் அனைத்து கல்வி நிலையங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை முதல் நவம்பர் 11ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தலைமை செயலகம், நீதிமன்றங்கள், முக்கிய வழிபாட்டுத் தலங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அதேபோல் தமிழகத்தில் 15 மையங்களில் நடைபெற்று வந்த காவலர் உடற்தகுதி தேர்வுகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக உடல்தகுதி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சீருடைப் பணியாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.