கோவை அருகே உறங்கிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுமி மீது டிராக்டர் ஏறி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே சிறுமி துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள ஆண்டிப்பாளையத்தில் தனியார் தேங்காய் நார் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் வட மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு குடும்பத்தினர் தங்கி இருந்து வேலை செய்து வருகின்றனர். இந்தநிலையில் வழக்கம் போல இன்று அந்த தொழிற்சாலையில் ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர் உமேஷ் பரத் என்பவருடைய மூன்று வயது மகள் ஆராதனா தேங்காய் நார் உலர வைக்கும் களத்தில் உறங்கிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
சாக்குப் பையை விரித்து அதில் ஆராதனா உறங்க வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்பொழுது அதே தொழிற்சாலையில் பணியாற்றி வந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த உத்தம் பரத் என்பவர் டிராக்டரை தேங்காய் நார் காய வைக்கப்பட்டிருந்த உலர் களத்திற்கு கொண்டு வந்த பொழுது தூங்கிக் கொண்டிருந்த சிறுமி ஆராதனா மீது டிராக்டர் ஏறியது. இந்த சம்பவத்தில் தலையில் பலத்த காயமடைந்த ஆராதனா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.