எஸ்.வி.சேகர் உள்பட பாஜகவிரை கைது செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு பயம் என்று டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், நண்பர் நாஞ்சில் சம்பத் யூ டியூப்பில் ஏதோ சொல்லிவிட்டார் என்பதற்காக உடனடியாக கைது செய்து உடல்நிலை சரியில்லாதபோதும் கொடுமைப்படுத்தினார்கள். அதேபோன்று எங்கள் கட்சியைச் சேர்ந்த சேலஞ்சர் துரை உட்பட 56 பேர் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்திவிட்டு சென்றபோது வேலுமணியின் ஆதரவாளர்கள் காவல்நிலையம் எதிரிலேயே தாக்கினார்கள். தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தர்ணா செய்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் 21 நாள் கழித்து ஜாமினில் வெளியே வந்திருக்கிறார்கள்.
இந்த காவல்துறையை நினைத்தால் வெட்கக் கேடாக உள்ளது. காவல்துறை ஏவல்துறையாக செயல்படுகிறார்கள். எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளரை தரக்குறைவாக பதிவுகள் செய்திருக்கிறார்.
எஸ்.வி.சேகரை கைது செய்யலாம் என உச்சநீதிமன்றமே சொன்ன பிறகும், எடப்பாடி பழனிசாமி அரசு அவரை கைது செய்யவில்லை. கைது செய்யாததில் இருந்து இவர்கள் பாஜகவுக்கு பயந்து கொண்டு இருக்கிறார்கள். பாஜகவினரை கைது செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு பயம். இங்கு இருப்பவர்கள் பதவியில் இருப்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள். இவ்வாறு கூறினார்.