வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ந்த வழக்கில் கதர் கிராம வாரிய வளர்ச்சி முன்னாள் மேலாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்த சென்னை சிறப்பு நீதிமன்றம் சொத்துகளை நாட்டுடைமை ஆக்கவும் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை அம்பத்தூரில் உள்ள தமிழ்நாடு கதர் கிராம வாரியத்தின் வளர்ச்சி அதிகாரி அலுவலகத்தில் மேலாளர் மற்றும் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தவர் ஜோசுவா செல்லப்பா. இவர், கடந்த 1.1.2001 முதல் 30.9.2006 வரையிலான பணிக்காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக 44 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய்க்கு தனது மனைவி, மகன் பெயரில் சொத்துகள் வாங்கி உள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை, ஜோசுவா செல்லப்பா மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓம்பிரகாஷ் முன்னிலையில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட ஜோசுவா செல்லப்பாவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும், அதிகாரி ஜோசுவா செல்லப்பா வசம் உள்ள 44 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அரசுடமையாக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.