தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஏற்று போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் தங்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3 நாட்களாக தொடர்ந்து போராடி வருவதை தமிழக அரசு முக்கியமாக கவனத்தில் கொண்டு சுமூகத் தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும்.
உண்ணாவிரதம் இருந்த சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களில் 100-க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மிகவும் வேதனை அளிக்கிறது.
மாணவர்களுக்கு கல்வியை கற்றுத்தந்து வருங்கால நல்வாழ்கைக்கு வழி காட்டும் ஆசிரியர்களை ரோட்டுக்கு வரவழைத்து குடும்பத்தோடு போராடக்கூடிய நிலைக்கு தள்ளியது தமிழக அரசு தான். ஆசிரியர்களின் கல்விப்பணி அர்ப்பணிப்பான பணி.
எனவே ஆசிரியர்களின் கல்விப்பணிக்கு அவர்களின் நியாயமான எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு பணி நியமனம், ஊதியம், ஊதிய உயர்வு, ஓய்வூதியம் போன்றவற்றை வழங்க வேண்டிய கடமை ஆளும் ஆட்சியாளர்களுக்கு இருக்கிறது.
இனிமேலும் தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் இப்பிரச்சனைக்கு நல்ல முடிவு ஏற்படுத்த நினைத்தால் தமிழக முதல்-அமைச்சர் இடைநிலை ஆசிரியர்களின் பிரதிநிதிகளை உடனே அழைத்து பேச்சுவார்த்தையில் நேரடியாக ஈடுபட்டு அவர்களின் கோரிக்கைகளுக்கு சுமூகத் தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.