
மருத்துவர், வழக்கறிஞர் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் அரங்கேறிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி, தஸ்வந்த்குமார் மற்றும் லிங்கேஷ் குமார் ஆகிய 2 மகன்கள் இருந்தனர். பாலமுருகனின் மனைவி சுமதி, உயர்நீதிமன்ற வழக்கறிஞராகப் பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று (12-03-25) இரவு இவர்கள் நான்கு பேரும் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்த சம்பவத்தை அறிந்த அக்கம்பக்கத்தினர், இன்று காலை திருமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவல் கிடைத்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், நான்கு நபர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 நபர்களும் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பாலமுருகன் குடும்பத்திற்கு ரூ.5 கோடி கடன் இருப்பதாகவும், இதனால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், உண்மையான காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.