Skip to main content

59 வீடியோக்கள்.. 20க்கு மேற்பட்ட மாணவிகள்... - அத்துமீறிய கல்லூரி பேராசிரியர்!

Published on 17/03/2025 | Edited on 17/03/2025

 

Professor misbehaves with female students in Hathras

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில்  தனியார் முதுநிலை கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வரும் இந்த கல்லூரியில் ரஜ்னீஷ் குமார் என்பவர் கடந்த 20 வருடங்களாக புவியியல் துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் பேராசிரியர் ரஜ்னீஷ் குமார் பல மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அத்துமீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர் தனது துறையில் படிக்கும் மாணவிகளிடம் தன்னுடைய ஆசைக்கு இணங்க வேண்டும், அப்படி இல்லையென்றால் மதிப்பெண்ணை குறைத்து விடுவேன் என்று மிரட்டியும், ஆசை வார்த்தைகள் கூறியும் அத்துமீறியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மாணவிகளை தனியாக தனது அறைக்கு வரவழைத்து அவர்களிடம் தொடர்ந்து அத்துமீறுவதை வாடிக்கையாக வைத்திருந்திருக்கிறார். அத்துடன் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறுவதைத் தனது செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்து வைத்துள்ளார்.

அண்மையில் இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல ஆண்டுகாலமாகவே ரஜ்னீஷ் குமார் தன்னிடம் படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், ஆனால் இதுகுறித்து புகார் அளித்தால் கல்லூரி நிர்வாகம் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் மூடி மறைத்துள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு பெயர் குறிப்பிட விரும்பாத மாணவி ஒருவர் பேராசிரியர் ரஜ்னீஷ் குமார் மீது பாலியல் புகார் கொடுத்தார்.புகாரின் பேரில், போலீசார் நடத்திய விசாரணையில் ரஜ்னீஷ் குமார் பல மாணவிகளிடம் அத்துமீறி  நடந்துகொண்டதை கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த 13 ஆம் தேதி ரஜ்னீஷ் குமார் மீது வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து ரஜ்னீஷ் குமார் தலைமறைவானார். இதனிடையே தொடர் மௌனம் காத்துவந்த கல்லூரி நிர்வாகம் நேற்று ரஜ்னீஷ் குமாரை பணியிடை நீக்கம் செய்தது.

இதுகுறித்து பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிரஞ்சீவி நாத் சின்ஹா, “ரஜ்னீஷ்குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட உடனேயே அவர் தலைமறைவாகி விட்டார். அவரை தீவிரமாக தேடி வருகிறோம். விரைவில் கைது செய்யப்படுவார்” என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த வழக்கின் விசாரணைத் தொடர்பாக 59 வீடியோக்கள் சிக்கியுள்ளதாகவும், 20க்கும் மேற்பட்ட மாணவிகள் பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது.

கல்லூரியில் பாடம் கற்பிக்கும் பேராசிரியரே மாணவிகளிடம் தவறாக நடந்துக்கொணட்து பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்