
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள இடைக்கோடு என்ற பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக ஜான் கிறிஸ்டோபர் என்பவர் பணியாற்றி வருகிறார். இத்தகையச் சூழலில் தான் இந்த பள்ளிக்கு வந்த இளம் பெண் ஒருவர் பள்ளியில் படிக்கும் தனது குழந்தையைப் பார்க்க வேண்டுமெனத் தலைமை ஆசிரியர் ஜான் கிறிஸ்டோபரிடம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக அந்த குழந்தையைப் பள்ளியில் சேர்க்கும் போது குழந்தையின் தந்தை, ‘என்னுடைய அனுமதியின்றி யாரும் குழந்தையைச் சந்திக்க அனுமதிக்கக் கூடாது’ என்று தலைமை ஆசிரியரிடம் கூறியதாகக் கூறப்படுகிறது. ஆகையால் குழந்தையின் தந்தையின் அனுமதி இருந்தால் மட்டுமே குழந்தையைப் பார்க்க முடியும் எனத் தலைமை ஆசிரியர் அந்த இளம் பெண்ணிடம் தெரிவித்துள்ளார். இருப்பினும் தொடர்ந்து அந்தப் பெண் ஆசிரியரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
அதோடு, ஆத்திரமடைந்த இளம்பெண் தலைமை ஆசிரியரின் கன்னத்தில் அறைந்துள்ளார். இதனையடுத்து இது தொடர்பாக அருமனை காவல் நிலையத்தில் தலைமை ஆசிரியர் புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தலைமை ஆசிரியரின் கன்னத்தில் அந்த இளம் பெண் அறையும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், குழந்தையின் தாயார் தான் அந்தப் பெண் என்பது தெரியவந்துள்ளது. அவர், கணவரைப் பிரிந்து தயாருடன் வாழ்ந்து வருவது தெரியவந்தது. அதே சமயம் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள பெண்ணை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.